எரியும் இலங்கை: அழிக்கப்படுகிறதா இந்து கோயில்கள்? நேரடி ரிப்போர்ட் - 2

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: அழிக்கப்படுகிறதா இந்து கோயில்கள்? நேரடி ரிப்போர்ட் - 2

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சைவ ஆலயங்களிலும் சமய இலக்கியங்கள் மற்றும் ஏட்டுச் சுவடிகளிலும் வரலாறாகக் குறிப்பிடப்பட்டுள்ள சைவ  ஆலயங்கள் பலவற்றில் பௌத்தத் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாக இலங்கைத் தொல்லியல்  துறை கடந்த 10 ஆண்டுகளாக  உரிமை கோரி வருகின்றது.

அவற்றில் சில: 

1. ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்
2. மாந்தை கிழக்கு பத்திரகாளி அம்மன் கோயில்
3. குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோயில்
4. குமுழமுனை ஆஞ்சனேயர் கோயில்
5. பாண்டியன்குளம் சிவன் கோயில்
6. வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோயில்
7. குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோயில்
8. மன்னார் திருக்கேதீஸ்வரக் கோயில்
9. மயிலிட்டி போர்த்துகேயர் கோயில்
10. ஒதியமலை வைரவர் கோயில்
11. முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில்
12. திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை
13. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்
14. புல்மோட்டை அரிசி ஆலை மலைக் கோயில்
15. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம்
16. மூதூர், சூடைக்குடா மலைப்பகுதி முருகன் ஆலயம்
17. திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம்
18. மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன்
19. சிவபுரம் சிவாலயம்
20. மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில்
21. குஞ்சுமப்ப பெரியசாமி கோயில்
22. ஸ்ரீமலை நீலியம்மன் கோயில்
23. கல்லுமலை பிள்ளையார் கோயில்
24. மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம்
25. மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை
26. குருந்தூர்மலை ஆதி ஐயனார் கோயில் 
27. மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம் 
28. கன்னியா வெந்நீர் ஊற்று
29. உருத்திரபுரம் சிவன் கோயில் 
30. குசலமலை சைவ குமரன் ஆலயம் 
31. காங்கேசன்துறை சைவ ஆலயம் 
32. வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம்

மேற்குறிப்பிட்ட ஆலயங்களில், திருகோணமலை, கோணேஸ்வரம் கோயிலில், நிர்மாணிக்கப்பட்டு வந்த சகல கட்டுமானங்களையும் தொல்லியல் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தக் கோயில் வளாகத்தில் இருக்கின்ற கட்டுமானங்களில் 99 சதவீதமானவை, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த இடம் பௌத்த மதத்திற்கு உரியது என்றும் அறிவித்துள்ளனர்.

அதேநேரம், கிழக்கு மாகாணத் தொல்லியல் தொடர்பான குடியரசுத் தலைவர் செயலணியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர், திருக்கோணேஸ்வர ஆலயம் அனுராதபுர காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என்று உரிமை கோரியிருக்கிறார் 

அதேபோல, திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீமலை நீலியம்மன் கோயில் அழிக்கப்பட்டுக் கோயில் வளாகத்தில் பாஷண பப்பாத ராஜமஹா விகாரை (Pashana Pabbatha Rajamaha Vihara) என்கிற பௌத்த ஆலயத்தையும் அமைத்திருக்கிறார்கள். 

இதுமட்டுமின்றி திருகோணமலை மாவட்டத்தில் முகத்துவாரம் பிரதேசத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த குஞ்சுமப்ப பெரியசாமி கோயில் முழுமையாக அழிக்கப்பட்டு அந்த கோயில் இருந்த இடத்தில இப்போது ’லங்கா பட்டுன சமுத்திரகிரி’ என்கிற பெயரில் புதிய விகாரை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.

திருகோணமலையில் பட்டணமும் சூழலும் பிரதேச சபை நிர்வாகத்தில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றுகள்  மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்குக் கீழ் கொண்டு வரப்பட்டு பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக உரிமை கோருகிறார்கள்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தென்னமரவடி கந்தசாமி மலை ஆலயத்தில் வழிபாடு நடத்த தொல்லியல் திணைக்களம் தடை விதித்துள்ளது. கந்தசாமி மலை பௌத்த மத பூமி என உரிமை கோரி இருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளை மீறி கோயில் வளாகத்தில் புத்த பிக்கு ஒருவரின் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டன. 

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாடுகள் நடத்த தொடர்ச்சியாக தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதோடு ஆலய பரிபாலன சபை  உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குருந்தூர்மலை ஆதி ஐயனார் கோயில் சூலத்தை அகற்றியதோடு நீதிமன்ற உத்தரவுகளை மீறி பௌத்த விகாரை ஒன்றை நிறுவும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஆலயச் சூழலில் குருந்த அசோகராம என்கிற புராதன பௌத்த ஆலயம் இருந்ததாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது

காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலயம் ஒன்று இடிக்கப்பட்டு ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலமலை சைவ குமரன் ஆலயச் சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக பௌத்த பிக்குகள் உரிமை கோரி வரும் நிலையில் ஆலயத்தின் முன் கதவு, கருவறை விக்கிரம் அடித்து நொறுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                                                                                                                (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com