எரியும் இலங்கை: வரலாறு காணாத விலைவாசி உயர்வு; நேரடி ரிப்போர்ட்- 4

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: வரலாறு காணாத விலைவாசி உயர்வு; நேரடி ரிப்போர்ட்- 4

இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கிறது. இந்தியாவையும், ஐ.எம்.எப்-யையும் நம்பிதான் அவர்கள் இருக்கிறார்கள்.

சீனா இனிமேல் பெரிய தொகையை இலங்கைக்கு வழங்குமா என்பது சந்தேகமான விஷயம். சீனாவைப் பொருத்தவரையில் தனக்கான பணிகளும், தேவைகளும் முடிந்துவிட்டன. அம்பந்தோட்டா, கொழும்பு துறைமுக முனையம், திருகோணமலை... அதேபோல பல்வேறு திட்டங்களுக்குத் தங்களுடைய தேவைகளை முடித்துக் கொண்டன.

இனிமேல் எந்த அளவு இலங்கைக்கு சீனா உதவும் என்று தெரியவில்லை. பசில் ராஜபட்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டு, மிகுந்த தாமதத்திற்குப் பின், தில்லிக்கு வந்து மன்றாடி இந்திய அரசிடமிருந்து ஒரு பில்லியன் டாலர் (ரூ. 7,500 கோடி)  உதவியாக  பெற்றுக்கொண்டார்.

பிறகு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துச் சென்றார். இதனிடையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர், ஆர்எஸ்எஸ் தலைவரை நாக்பூரில் சந்தித்து அவருடைய பரிந்துரையும் கிடைத்ததன் பேரில் இவர்களுக்கு இந்தக் கடன்தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடன் தொகையை இந்தியாவிடம் பெற்றாலும், ராஜபட்ச சகோதரர்களுக்கு நன்றி இருக்குமா என்பது தெரியவில்லை. பஞ்சபாண்டவர் போல இருந்தாலும், பஞ்ச பாண்டவர்களின் குணம் இல்லாதவர்களாக வெறும் சிகப்புத் துண்டை போட்டுக்கொண்டு ராஜபட்ச சகோதரர்கள் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை. 

இலங்கை விலைவாசி நிலவரம் (மாறிக்கொண்டே இருக்கும்):

  • எரிவாயு சிலிண்டர் 1 - 4,390 ரூபாய்
  • தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் - 750 ரூபாய்
  • பெட்ரோல் ஒரு லிட்டர் - 283 ரூபாய்
  • டீசல் ஒரு லிட்டர் - 213 ரூபாய்
  • அங்கர் பால் மா ஒரு கிலோ - 1960 ரூபாய்
  • கோதுமை மாவு ஒரு கிலோ - 180 ரூபாய்
  • சர்க்கரை ஒரு கிலோ - 185 ரூபாய்
  • தக்காளி ஒரு கிலோ - 330 ரூபாய்
  • உருளைக்கிழங்கு ஒரு கிலோ - 220 ரூபாய்
  • வெங்காயம் ஒரு கிலோ - 220 ரூபாய்
  • கேரட் ஒரு கிலோ - 290 ரூபாய்
  • முருங்கைக்காய் ஒரு கிலோ - 720 ரூபாய்
  • பீன்ஸ் ஒரு கிலோ - 240 ரூபாய்
  • தேங்காய் 1 - 100 ரூபாய்
  • பூண்டு ஒரு கிலோ - 450 ரூபாய்
  • புடலங்காய் ஒரு கிலோ - 180 ரூபாய்
  • பூசணிக்காய் ஒரு கிலோ - 220 ரூபாய்
  • மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் - 89 ரூபாய்
  • பருப்பு ஒரு கிலோ - 350 ரூபாய்
  • கோழி இறைச்சி ஒரு கிலோ - 900 ரூபாய்

அதேபோல பெட்ரோல், டீசல் வாங்கும் இடங்களெல்லாம்  நீண்ட வரிசை. ஒரு மணி நேரம் 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் காத்திருந்து டீசல் வந்த பிறகு வாங்கிச் செல்கிறார்கள்.

இப்படியான நிலையில், இலங்கை எங்கே செல்லும் எனத் தெரியவில்லை. ஏற்கெனவே தமிழர்களைப் பாடாய்ப்படுத்தும் சிங்கள அரசு ஒருபுறம் என்றால் விலைவாசி உயர்வும் தமிழர்களுடைய நிலையைக் கடுமையாகப் பாதிக்கக் கூடும்.

பிரதமர் மகிந்த ராஜபட்ச இந்த மாத இறுதியில், யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்குச் செல்கிறார். அங்கே தமிழர் கலாசார மையத்தை திறந்து வைக்கிறார். அற்புதமாகக் கட்டப்பட்ட அந்த மையம், தமிழர்களுடைய நலன், கலாசாரத்தைப் பாதுகாக்கின்ற மையமாக இருக்க வேண்டும். அதையும் சிங்கள அரசு ஆக்கிரமித்துவிடக் கூடாது என்பதுதான் இப்போதைய கவலை.

பலாலி விமான நிலையம் இந்திய அரசால் திரும்பச் சரிசெய்து கட்டப்பட்டு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் துவங்கிய பிறகு, நோய்த் தொற்று அச்சுறுத்தலால் மூடப்பட்டு திரும்பவும் திறக்கப்படவில்லை.

எரிபொருள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
எரிபொருள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இந்திய அரசு இதற்கு கோபப்பட்டுள்ளது. ஏன் இந்த விமான நிலையம் திறக்கப்படவில்லை என்றும் நான் பலாலி விமான நிலையத்தில் தான் தரை இறங்குவேன் என்று பிரதமர் சொல்லியிருப்பதாகச் செய்திகள். பிரதமர் அப்படி சொல்லியிருந்தால் மகிழ்ச்சியான செய்தியாக, நான் யாழ்ப்பாணத்தில் இறங்க மாட்டேன் பலாலியில், தமிழர் பகுதியில்தான் என்னுடைய விமானம் இறங்கும் என்று பிரதமர் இறங்குவதற்கான பணிகள் அங்கே நடந்து கொண்டிருக்கிறன.

பிரதமர் கலாசார மையத்தை திறக்கப் போகிறார்.  தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை நிச்சயமாகப் பேச வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

                                                                                                                         (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com