சர்ச்சையானதால் காத்மாண்டு அருகேயிருக்கும் விடுதிக்கு மாறினார் ராகுல்

கேளிக்கை விடுதியில் ராகுல் காந்தி பொழுதைக் கழித்ததாக பாஜக கடுமையான விமரிசனத்தை முன்வைத்திருந்த நிலையில், காத்மாண்டு எல்லைப் பகுதியிலிருக்கும் வேறு விடுதிக்கு இடம்மாறினார்.
சர்ச்சையானதால் காத்மாண்டு அருகேயிருக்கும் விடுதிக்கு மாறினார் ராகுல்
சர்ச்சையானதால் காத்மாண்டு அருகேயிருக்கும் விடுதிக்கு மாறினார் ராகுல்


காத்மாண்டு: காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டிருக்கும்போது நேபாளத்தில் இரவுக் கேளிக்கை விடுதியில் ராகுல் காந்தி பொழுதைக் கழித்ததாக பாஜக கடுமையான விமரிசனத்தை முன்வைத்திருந்த நிலையில், காத்மாண்டு எல்லைப் பகுதியிலிருக்கும் வேறு விடுதிக்கு இடம்மாறினார்.

நேபாளத்தைச் சேர்ந்த தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை மாலை காத்மாண்டுக்கு வந்த ராகுல், காத்மாண்டுவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். திருமணம் முடிந்ததும் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற விருந்திலும் பங்கேற்றார். அங்கே எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து சர்ச்சை உருவானது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஐந்து நாள் தனிப்பட்ட பயணமாக திங்கள்கிழமை நேபாள நாட்டுக்குச் சென்றார். இந்நிலையில், பாஜகவின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் "கடந்த 2008-இல் மும்பை நகரை பயங்கரவாதிகள் தாக்கிக் கொண்டிருந்தபோது ராகுல் காந்தி இரவுக் கேளிக்கை விடுதியில் இருந்தார். அவரது கட்சி தேய்ந்து கொண்டிருக்கும்போது அவர் இரவுக் கேளிக்கை விடுதியில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்' என்று அமித் மாளவியா தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி நேபாளத்துக்கு சென்றுள்ளார். யாரும் அழைக்காமல் அவர் அங்கு செல்லவில்லை. ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் திருமணத்தில் பங்கேற்பது குற்றமில்லை.

பிரதமர் நரேந்திர மோடி அழையா விருந்தாளியாக பாகிஸ்தானுக்குச் சென்று, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பிறந்த நாளைக் கொண்டாடி கேக் வெட்டியதைப் போல ராகுல் செல்லவில்லை. ஊடகவியலாளரான தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்கவே ராகுல் நேபாளம் சென்றுள்ளார்.

குடும்பத்தையும் நண்பர்களையும் கொண்டிருப்பதும், திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் நமது நாட்டின் கலாசாரமும் நாகரிகமும் ஆகும். திருமணம் செய்து கொள்வதும் சிலருடன் நண்பராக இருப்பதும் அல்லது அவர்களின் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதும் குற்றமில்லை. திருமணத்தில் பங்கேற்பது சட்ட விரோதம் என்று பிரதமர் மோடி அல்லது பாஜக ஒருவேளை முடிவு செய்யலாம். நண்பர்களைக் கொண்டிருப்பதும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் ஒரு குற்றம் என்று அவர்கள் கூறக் கூடும் என்று சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com