
கடந்த இரண்டு மாதங்களில், வைட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 800 ஊழியர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். அலுவலகத்திலிருந்து அவர்கள் விலகியதற்கான காரணம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
வொர்க் பிரம் ஹோம் (வீட்டிலிருந்து பணிபுரியும் முறை) முடிந்து அலுவலகத்திற்கு திரும்பும்படி கேட்டு கொள்ளப்பட்டதால் அவர்கள் ராஜிநாமா செய்துள்ளதாக ஐஎன்சி42 செய்தி வெளியிட்டுள்ளது. அலுவலகத்திற்கு சென்று பணி செய்ய விரும்பாத காரணத்தால் பணியாளர்கள் தானாக முன்வந்து ராஜிநாமா செய்திருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை, பெங்களூரு, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு ஒரு மாதத்திற்குள் அனைத்து ஊழியர்களும் திரும்ப வேண்டும் என மார்ச் 18ஆம் தேதி இ மெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், உத்தரவை பின்பற்றுவதற்கு பதில், பெரும்பான்மையான பணியாளர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.
செலவை குறைப்பதற்காகவே அலுவலகத்திற்கு அழைத்திருப்பதாகவும் இதுபோன்று பலர் ராஜிநாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பணியாளர்கள் ஐஎன்சி42 செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். கணினி குறியீட்டு முறையை கற்பிக்கும் இணைய நிறுவனமான வைட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தை கடந்த 2020ஆம் ஆண்டு பைஜூஸ் வாங்கியது.
இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், "வைட் ஹாட் ஜூனியர் நிறுவனர் கரண் பஜாஜ் விலகி நிறுவனத்தை பைஜூஸ் வாங்கிய பிறகு நிலைமை மாறிவிட்டது. தலைமை பொறுப்பில் பஜாஜ் இருக்கும் வரை நிலைமை சுமூகமாக இருந்தது" என்றார்கள்.
ஸ்டார்ட் அப் நிறுவனமான வைட் ஹாட் ஜூனியரை 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பைஜூஸ் வாங்கிய பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கரண் நிறுவனத்திலிருந்து விலகினார்.
பணியாளர்களை அலுவலகத்திற்கு திருப்பி அழைத்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைட் ஹாட் ஜூனியர், "அலுவலகத்திற்கு திரும்பும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக எங்கள் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு பணியாளர்களில் பெரும்பாலானோர் ஏப்ரல் 18 முதல் குருகிராம் மற்றும் மும்பை அலுவலகங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மருத்துவம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு நாங்கள் விதிவிலக்கு அளித்துள்ளோம். தேவைக்கேற்ப இடமாற்ற உதவிகளை வழங்கியுள்ளோம். எங்கள் ஆசிரியர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுவார்கள்" என குறிப்பிட்டுள்ளது.
வாரத்திற்கு மூன்று நாள், அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற உத்தரவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.