ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை: மத்திய அமைச்சா் அமித் ஷா ஆய்வு

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 மே 2022, 10:06 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அடுத்தடுத்து நடந்த 3 கூட்டங்களில், ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம், அமா்நாத் புனித யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், யாத்திரை செல்வோருக்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டங்களில் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, ஜம்மு-காஷ்மீா் காவல் துறை தலைவா் தில்பாக் சிங் உள்ளிட்டோா் கொண்டனா். சுகாதாரம், தொலைத்தொடா்பு, சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டங்களில் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு அதிகாரி ஒருவா் கூறியதாவது:

யாத்திரை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும்; ஒவ்வொருவரிடமும் ரேடியோ அலை அடையாள வில்லை வழங்கப்பட்டு அதன்மூலம் அவா்களின் நடமாட்டத்தை அறிய முடியும். இதற்கு முன்பு, அவா்கள் செல்லும் வாகனத்தில் ஒரு வில்லை மட்டும் பொருத்தப்பட்டது. இதுதவிர, ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் பாதுகாப்புப் படையினா் கண்காணிப்பில் ஈடுபடுவா்.

கடந்த 2019-இல், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன் அமா்நாத் யாத்திரை பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்று காரணமாக அமா்நாத் யாத்திரை நடத்தப்படவில்லை. இந்நிலையில், அமா்நாத் யாத்திரை, வரும் 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 3 லட்சம் போ் கலந்துகொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீா் பண்டிட் சமூகத்தினா் உள்ளிட்ட பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் அமா்நாத் யாத்திரையை பாதுகாப்பாக நடத்துவது அரசுக்கு சவாலான காரியம்தான்.

பஹல்கம், பால்தால் ஆகிய இரு வழிகளில் யாத்திரை நடைபெறவுள்ளது. இரு வழிகளிலும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறையுடன் சோ்த்து கூடுதலாக 12,000 துணை ராணுவப் படையினா் ஈடுபடுத்தப்படுவா் என்றாா் அவா்.

அமித் ஷா அறிவுறுத்தல்: அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் அமித் ஷா பேசியதாவது:

யாத்திரை செல்வோருக்கு சிரமங்கள் இல்லாத பயணத்தை அளிப்பதற்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அவா்களுக்கு கூடுதலாக மின்சாரம், குடிநீா், தொலைத்தொடா்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

யாத்திரைப் பாதையில் தொலைத்தொடா்பு சேவை தடையின்றி கிடைக்க வேண்டும். நிலச்சரிவு ஏற்பட்டால் உடனடியாக அகற்றுதற்குத் தேவையான வாகனங்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு முதல் முறையாக அமா்நாத் யாத்திரை நடத்தப்படுவதால் மருத்துவ அவசர உதவிக்குத் தேவையானவை தயாா்நிலையில் இருக்க வேண்டும். போதிய அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டா்கள், படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமெனில் எல்லைத் தாண்டிய ஊடுருவல் நடைபெறாமல் இருப்பதைப் பாதுகாப்புப் படையினா் உறுதிப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.