"குளிர்' ஹிமாசலில் பாஜக-காங். அக்னிபரீட்சை!

குளிர் பிரதேச மாநிலமான ஹிமாசல பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ளது.
"குளிர்' ஹிமாசலில் பாஜக-காங். அக்னிபரீட்சை!

 குளிர் பிரதேச மாநிலமான ஹிமாசல பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் பாஜகவும், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன.
 68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் பேரவைத் தேர்தலுக்கு நவ. 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. டிச. 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த அக். 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி மொத்தம் 413 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 பாஜக-காங்கிரஸ் இடையேதான் நேரடிப் போட்டி என்றாலும் பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில் ஆம்ஆத்மியும் ஹிமாசலில் களம் காண்கிறது. அந்தக் கட்சிக்கு கிடைக்கப்போகும் வாக்குகள் பாதிப்பை ஏற்படுத்தப்போவது பாஜகவுக்கா, காங்கிரஸுக்கா என்கிற விவாதங்களும் எழுந்துள்ளன.
 கடந்த 2017 தேர்தலில் பாஜக 48.79 சதவீத வாக்குகளைப் பெற்று 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41.7 சதவீத வாக்குகளைப் பெற்று 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை சந்தித்து வரும் மாநிலங்களில் ஒன்றான ஹிமாசலின் வரலாற்றை இந்தத் தேர்தல் மாற்றுமா அல்லது வரலாறு தொடருமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 பாஜக - சாதகமும் பாதகமும்
 பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு இருக்கும் செல்வாக்கு ஹிமாசல் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அடுத்தடுத்து பல பிரசார கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனர்.
 கடந்த அக். 5-ஆம் தேதி ஹிமாசலில் ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியுடன் சேர்த்து கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக பிரதமர் மோடி ஹிமாசலுக்கு வருகை தந்தார். மேலும், குல்லு நகரத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவின்போது சுவாமி ரகுநாதரையும் பிரதமர் தரிசனம் செய்தார். அந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஒரே பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஹிமாசலை சேர்ந்தவர் என்பதால், அவர் தீவிர களப் பணியாற்றி வருகிறார். நட்டாவின் மூன்றாண்டு பதவிக் காலம் வரும் ஜனவரியில் நிறைவு பெறவிருக்கிறது. இருப்பினும் அவருக்கு கட்சித் தலைவர் பதவி மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது செயல்பாடுகள் பலரையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது.
 தேர்தலில் பாஜக வெற்றி பெறும் நிலையில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இத்தேர்தலில் போட்டியிட 11 எம்எல்ஏ-க்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. 21 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட ஐந்து எம்எல்ஏக்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவது பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவதைத் தடுக்க ஜெ.பி.நட்டா முயன்றும் அது முடியவில்லை. இதையடுத்து ஐந்து பேரையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது பாஜக.
 ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை, மாநிலத்தில் காவலர் தேர்வு உள்ளிட்ட சில முறைகேடுகள் குறித்த காங்கிரஸின் தீவிர பிரசாரம் ஆகியவையும் பாஜகவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன.
 காங்கிரஸின் வாக்குறுதிகள்
 அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆளும் பாஜக முறைகேடுகளைச் செய்துள்ளதாகக் கூறி அதை தேர்தல் அறிக்கையாகவும் வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.
 காவலர் தேர்வு விவகாரத்தில் ரூ.250 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் ஜெய்ராம் தாக்குரின் தொடர்பு இல்லாமல் இது நடந்திருக்க முடியாது என்றும் காங்கிரஸ் செய்யும் பிரசாரம் பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 ஆறுமுறை முதல்வராக இருந்த வீர்பத்ர சிங் இல்லாத குறையை இத்தேர்தலில் காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள வீர்பத்ர சிங்கின் மனைவி பிரதிகா சிங் தலைமைக்கும் இத்தேர்தல் ஒரு சவாலை அளித்துள்ளது.
 முந்தைய காங்கிரஸ் அரசின் வளர்ச்சித் திட்டங்களே காங்கிரஸின் முதன்மையான தேர்தல் வியூகம் எனக் கூறும் அவர், மோடியின் செல்வாக்கு ஹிமாசலில் எடுபடாது என்றும், ஆம்ஆத்மி போட்டியிலேயே இல்லை எனவும் கூறுகிறார்.
 பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை, எளிமையான கல்விக் கடன், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது காங்கிரஸ்.
 காங்கிரஸின் வழக்கமான கோஷ்டி சண்டை ஹிமாசலிலும் உள்ளது. முகேஷ் அக்னிஹோத்ரி, கௌல் சிங் தாக்குர், சுக்விந்தர் சுகு, ஹர்ஷ்வர்தன், ஆஷா குமாரி போன்ற மூத்த தலைவர்கள் தாம் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
 தேசிய அளவில் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா மட்டுமே தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். "இந்தியாவை இணைப்போம்' (பாரத் ஜோடோ) நடைப்பயணத்தில் தீவிரமாக இருக்கும் ராகுல் காந்தி, ஹிமாசல் தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
 அடியெடுத்து வைக்கும் ஆம்ஆத்மி
 தில்லியில் ஆட்சியில் உள்ள அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி, பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ளது. இதனால், ஹிமாசல் பேரவைத் தேர்தலிலும் அது களம் காண்கிறது. 68 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து அதிரடியாக களத்தில் இறங்கியிருந்தாலும், பஞ்சாபில் பகவந்த் மான் போன்ற ஒரு தலைவர் ஹிமாசலில் ஆம்ஆத்மிக்கு இல்லை.
 இருப்பினும் ஆம்ஆத்மிக்கு கிடைக்கப்போகும் வாக்குகள் பாஜக, காங்கிரஸ் இவற்றில் எந்தக் கட்சிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதைப் பொருத்துத் தேர்தல் முடிவுகள் அமையக்கூடும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.
 
 கடந்த 2017 தேர்தலில் பாஜக 48.79 சதவீத வாக்குகளைப் பெற்று 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41.7 சதவீத வாக்குகளைப் பெற்று 21தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை சந்தித்து வரும் மாநிலங்களில் ஒன்றான ஹிமாசலின் வரலாற்றை இந்தத் தேர்தல் மாற்றுமா அல்லது வரலாறு தொடருமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com