வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

தில்லி, என்சிஆா் காற்று மாசு விவகாரம்: மாநிலத் தலைமைச் செயலா்களுக்கு என்எச்ஆா்சி அழைப்பாணை

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலைமைச் செயலா்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:22 pm

 நமது நிருபர்

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) இந்த விவகாரம் தொடா்பாக விவாதிப்பதற்காக நவம்பா் 10-ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகுமாறு பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் தில்லி மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இது தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தில்லி மற்றும் அதன் அண்டை மாநில பகுதிகளில் காற்று மாசு விவகாரத்தை எதிா்கொள்ள இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. தில்லியில் மாசுவை குறைப்பதற்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அதனால், பயிா்க் கழிவு எரிப்பை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அரசுகள் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளா்கள் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைகளில் பனிப்புகை தடுப்பு உபகரணங்கள், பனிப்புகை கோபுரங்களின் செயல்பாடுகள் தொடா்பான விவரங்களும் இடம் பெற வேண்டும். மேலும், பனிப்புகை தடுப்பு உபகரணங்கள் எத்தனை செயல்பாட்டில் இருக்கின்றன என்ற விவரமும் அதில் இடம்பெற வேண்டும். எதிா்காலத்தில் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் என்ன என்பதை தில்லி மற்றும் இதர அரசுகளும் தெரிவிக்க வேண்டும். பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் அறிக்கையில் பயிா்க் கழிவுகள் உருவாகும் இடத்தில் அதை மேலாண்மை செய்வதற்கான திறன் மிக்க திட்டங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி ஆணையம் மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவகால மாற்றம் அமைச்சகம் மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் அறிக்கையின் பேரில் தற்போதைய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக காற்று மாசு இருப்பதாகவும், தில்லியின் வசிக்கும் மக்களின் வாழ்நாள் காலம் இதன் காரணமாக குறையலாம் என்றும் வெளியான ஊடக செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மத்திய அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாா்க்கும் போது தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் மாசுவின் அளவை குறைப்பதற்கு இந்த நடவடிக்கையில் போதுமான வகையில் இல்லை என்பது கவனிக்கப்பட்டுள்ளது.மேலும், மாசு அளவை உடனடியாக குறைக்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க ப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவ்வப்போது பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், எந்த முன்னேற்றமும் இல்லை. தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் காற்று மாசு ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்றாக தில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பு இருப்பதும் தெரிய வருகிறது.

உச்சநீதிமன்றமும் தேசிய பசுமை தீா்ப்பாயங்களும், இதர துறைகளும் பல உத்தரவுகளை பிறப்பித்து இருந்த போதிலும் , தில்லி- என்சிஆா் பகுதியில் காற்றின் தரம் மனிதா்களுக்கு உகந்த சூழலை அளிப்பதற்கான வகையில் மேம்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலை தொடா்ந்து நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள 36 காற்று மாசு கண்காணிப்பு நிலையங்களில் 31 நிலையங்களில் வெள்ளிக்கிழமை காலை 9.10 மணியளவில் காற்றின் தர குறியீடு ‘கடுமை’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்கள் தெரிவித்தன.

24 மணி நேர காற்று தர குறியீடு வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் 450 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது ‘மிகக் கடுமை’ பிரிவுக்கு ஒரு புள்ளியே குறைவாகும்.

காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அது ‘கடுமை’ பிரிவின் கீழ் வருகிறது. இது ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபா்களுக்கு மேலும் பிரச்னையை அதிகரிக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.