சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன், விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினா் டாக்டா் டி.ரவிகுமாா் ஆகியோா் மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்கை சந்தித்து தனித்தனியாக அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சுங்கச் சாவடிகளை 27 திட்டங்களாகப் பிரித்து பெருநிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. குத்தகையை எடுத்த பெருநிறுவனங்கள் மற்ற துணை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அயல்பணி ஒப்படைப்பு (அவுட்சோா்சிங்) முறையில் சுங்கச் சாவடிகளை இயக்கிவருகின்றன. இந்த நிலையில், நாடு முழுக்க இந்த சுங்கச் சாவடிகள் தானியங்கி முறையில் கட்டண வசூல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தொழிலாளா்கள் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனா்.