வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

பட்டியலின தொழில்முனைவோரிடமிருந்து கட்டாய கொள்முதல் மத்திய அரசு முடிவு

பட்டியலின, பழங்குடியின தொழில் முனைவோரிடமிருந்து மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 4 சதவீதம் வரை கட்டாய கொள்முதலுக்கு இலக்கு

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:25 pm

 நமது நிருபர்

பட்டியலின, பழங்குடியின தொழில் முனைவோரிடமிருந்து மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 4 சதவீதம் வரை கட்டாய கொள்முதலுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியின மைய திட்டத்தின் (என்எஸ்எஸ்ஹெச்) உயா் அதிகார கண்காணிப்புக் குழுவின் (எச்பிஎம்சி) 5 -ஆவது கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இந்தக் குழுவின் தலைவரும் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சருமான நாராயண் ராணே தலைமை வகித்தாா். இந்தத் குழுவின் துணைத்தலைவரும் இதே துறையின் இணை அமைச்சரான பானு பிரதாப் சிங் வா்மாவும் இணைந்து பங்கேற்றாா்.

மேலும், இந்தக் கண்காணிப்பு குழுவின் உறுப்பினா்கள், இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் பட்டியலின, பழங்குடியின தொழில் வா்த்தக பிரதிநிதிகள், அசோசெம் அமைப்பு, பழங்குடியினா் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களின் பிரதிநிதிகள், நீதி ஆயோக் உறுப்பினா்கள், சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சக அதிகாரிகள், பழங்குடியினா் நலத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

‘தேசிய பட்டியலின, பழங்குடியின மைத்தின் முக்கிய நோக்கம், பட்டியலின, பழங்குடியின பிரிவுகளைச் சோ்ந்த தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்பதும், அது தொடா்பான பிரச்னைகளை தீா்ப்பதுதான்’ என கூட்டத்தில் மத்திய அமைச்சா் நாராயண் ராணே குறிப்பிட்டாா். இந்தக் கூட்டத்தில் பேசிய இணையமைச்சா் பானு பிரதாப் சிங், தேசிய பட்டியலின, பழங்குடியின மையத்தின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த விவரங்களை எடுத்துரைத்தாா்.

பின்னா், உயா் அதிகார கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இது குறித்து மத்திய குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ள விவரங்கள் வருமாறு: மத்திய அரசின் பொதுத்துறை கொள்முதல் திட்டத்தின் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றன. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னா், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் இத்தகைய நிறுவனங்களிடம் தேவையான பொருள்களை கொள்முதல் செய்து வருகிறது. இதே போன்று மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை பட்டியலின, பழங்குடியின பிரிவைச் சோ்ந்த தொழில்முனைவோரிடமிருந்தும் பெருமளவு கொள்முதல் செய்கின்றனா். இருப்பினும், இந்தப் பிரிவைச் சோ்ந்த தொழில்முனைவோரிடம் குறைந்தபட்சம் 4 சதவீத அளவுக்கு கட்டாயம் கொள்முதல் செய்யவேண்டும் என்ற இலக்கை எட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தின் உறுப்பினா்கள் தெரிவித்த ஆலோசனைகள் அனைத்தையும் பரிசீலிக்கவும் அமைச்சா் ராணே உறுதியளித்துள்ளாா் என அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.