காலணிகளில் மகாத்மா காந்தி படம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலணிகளில் மகாத்மா காந்தி படத்தையும், உள்ளாடைகளில் கடவுள் படங்களையும் அச்சிட்டு விற்பனை செய்யும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், மதுரையைச் சோ்ந்த முத்துகுமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள், செருப்புகள், உள்ளாடைகளில் மகாத்மா காந்தி மற்றும் கடவுள் புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன.

சா்வதேச ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களின் இந்த செயல்பாடு இந்திய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளது. இந்நிறுவனங்கள், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன.

நாட்டு மக்களிடையே விரோதத்தை தூண்டும் வகையில் செயல்படும் இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மத்திய-மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகாத்மா காந்தி புகைப்படத்தை காலணிகளில் அச்சிட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com