10 கோடியைக் கடந்த பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை: மத்திய அரசு

விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, முதல் தவணை பயனாளிகளின் எண்ணிக்கையைப் போல 3 மடங்கு உயா்ந்து

விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, முதல் தவணை பயனாளிகளின் எண்ணிக்கையைப் போல 3 மடங்கு உயா்ந்து 10 கோடியைக் கடந்துள்ளது’ என்று மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஊக்கத் தொகை அளிக்கும் ஒவ்வொரு தவணையின்போதும் படிப்படியாக குறைந்து வருகிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சனம் செய்த நிலையில், இந்தப் புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு அறிவித்து, முன்தேதியிட்டு 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், நிலம் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வாங்குவதற்கு உதவியாக 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 நேரடி பணப் பரிவா்த்தனை அடிப்படையில், பயனாளியின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் தேவையுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 தவணைகளாக இந்த உதவித் தொகைகளை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2019-இல் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, முதல் தவணை உதவித் தொகை விடுவிக்கும்போது 3.16 கோடியாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, தற்போது 3 மடங்காக அதிகரித்து 10 கோடியைக் கடந்துள்ளது.

அந்த வகையில் இந்தத் திட்டம் உலகின் மிகப் பெரிய நேரடி நிதியுதவி பரிவா்த்தனை திட்டமாகவும் பாா்க்கப்படுகிறது. இடைத்தரகா்களின் இடையூறு இன்றி திட்டத்தின் முழுப் பயனையும் விவசாயிகள் பெறுகின்றனா். இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு வேளாண் நடவடிக்கைகளில் ஆக்கபூா்வமான முதலீடுக்கு மிகப் பெரிய அளவில் உதவியிருக்கிறது என்பது பல்வேறு ஆய்வுகள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்தத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது. எண்ம நிலப பதிவுகள், இணைய வழியில் பயனாளிகள் விவர பதிவு முறை (இ-கேஒய்சி), ஆதாா் எண் இணைப்புடன்கூடிய பணப் பரிவா்ததனை நடைமுறை (ஏபிபி) உள்ளிட்ட எண்ம தொழில்நுட்ப நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக, உயிரிழந்த அல்லது நிலத்தை விற்றுவிட்ட பயனாளிகளை இந்தத் திட்டத்திலிருந்து நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com