இளைஞர்களிடையே அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பா் 26-ஆம் தேதி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விழாவை தொடக்கிவைத்தார். மேலும், மெய்நிகா் நீதி கடிகாரம், ‘ஜஸ்ட் ஐஎஸ்’ கைப்பேசி செயலி 2.0, எண்ம (டிஜிட்டல்) நீதிமன்றம், ‘எஸ்3வாஸ்’ வலைதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
இந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு மற்றும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் இளைஞர்களை மையமாகக் கொண்டது. இளைஞர்களிடையே அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசியல் சாசனம் தொடர்பான விவாதங்களில் நாட்டின் இளைஞர்கள் அதிகமாக பங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், 'இந்தியாவின் பலமே அரசியலமைப்புதான். நம் அரசியலமைப்பு சாசனம் திறந்த, எதிர்காலம் குறித்த முற்போக்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவையே நோக்கியுள்ளது. இந்தியாவின் விரைவான வளர்ச்சி, அதன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு மத்தியில், உலகம் நம்மை பெரும் எதிர்பார்ப்புகளுடன் பார்க்கிறது' என்றார்.