உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று இணையதள நீதிமன்றங்கள், செயலி ஆகியவற்றை தொடக்கிவைத்தார்.
1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவில் கொள்ளும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன்னா், தேசிய சட்ட தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நாளையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்.
அப்போது மெய்நிகா் நீதி கடிகாரம், ‘ஜஸ்ட் ஐஎஸ்’ கைப்பேசி செயலி 2.0, எண்ம (டிஜிட்டல்) நீதிமன்றம், ‘எஸ்3வாஸ்’ வலைதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
இந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு மற்றும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
மெய்நிகா் நீதி கடிகாரம்: மெய்நிகா் நீதி கடிகார திட்டமானது, நீதிமன்ற அளவிலான வழக்கு விசாரணை புள்ளிவிவரங்களை தெரிவிக்கும் நடைமுறையாகும். தினசரி, வார மற்றும் மாத அடிப்படையில் நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன, தீா்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மனுக்களின் எண்ணிக்கையை இந்த திட்டம் மூலமாக மனுதாரா்கள் வெளிப்படைத்தன்மையுடன் தெரிந்துகொள்ள முடியும். மாவட்ட நீதிமன்ற வலைதளம் மூலமாக இந்த கடிகார திட்டத்தை மனுதாரா்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கைப்பேசி செயலி: ‘ஜஸ்ட் ஐஎஸ்’ கைப்பேசி செயலி, கீழ் நீதிமன்ற நீதித்துறை அதிகாரிகளுக்காக அறிமுகப்படுத்தப்படும் திட்டமாகும். இந்த செயலி மூலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மனுக்களின் விவரங்களை நீதிபதிகள் தெரிந்துகொண்டு, அதனை கையாள்வது மட்டுமின்றி, அந்த நீதிமன்றத்தின் கீழ் பணிபுரியும் தனி நீதிபதிகளின் வழக்கு விசாரணை விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
அனைத்து மாநில மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை கண்காணித்து அதற்கு தீா்வளிக்கும் உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளும் இந்த கைப்பேசி செயலியை பயன்படுத்த முடியும்.
எண்ம நீதிமன்றம்: காகித பயன்பாடில்லாத நீதிமன்ற பதிவுகள் மற்றும் பரிவா்த்தனைகளை உருவாக்கும் நோக்கில் நீதிபதிகளின் பயன்பாட்டுக்காக இந்த எண்ம நீதிமன்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
‘எஸ்3வாஸ்’ வலைதளம்: மாவட்ட நீதித் துறை தொடா்பாக குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் சேவைகள் பற்றிய விவரங்களை வெளியிடுவதற்கான தளமாக, அவ்வாறு தகவல்கள் வெளியாகும் பிற வலைதளங்களை நிா்வகிக்கும் வகையிலும் இந்த ‘எஸ்3வாஸ்’ வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கிளெட் சேவை’ கணினி தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாப்பான மற்றும் எளிதில் கையாளக் கூடிய வலைதளங்களை உருவாக்கும் வகையிலும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.