மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிலிருந்ததாகக் கைது செய்யப்பட்ட தில்லி பல்கலை. பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மாவோயிஸ்ட் தலைவரான முப்பல்ல லஷ்மண ராவ் உடன் தொடர்ந்து தகவல்களை பரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா கடந்த 2014-ம் ஆண்டு மே-மாதம் ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைது செய்து விசாரித்தபோது சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாகக் கூறியிருந்தார்.
வழக்கு விசாரணையில் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழக்கப்பட்டு நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 90 சதவீத மாற்றுத்திறனாளியான அவர் சக்கர நாற்காலியிலேயே சிறையில் இருந்ததால் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.
இதையும் படிக்க | உலக பட்டினி குறியீடு: 107-வது இடத்திற்கு பின்தங்கியது இந்தியா!
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரே அடங்கிய அமர்வு முன் நேற்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்த நிலையில், சாய்பாபா மற்றும் அவருடன் கைதான 5 பேரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனு மீதான இன்றைய சிறப்பு விசாரணையில் மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த எம்.ஆர். ஷா மற்றும் எம். திரிவேதி ஆகிய நீதிபதிகள் அமர்வு, ஜி.என். சாய்பாபா மற்றும் 5 பேரின் விடுதலைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.