மத வழிபாட்டுத் தலங்களின் மேம்பாடு சுற்றுலாவை வலுப்படுத்தும்

இமயமலையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவது, அப்பகுதியில் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத வழிபாட்டுத் தலங்களின் மேம்பாடு சுற்றுலாவை வலுப்படுத்தும்

இமயமலையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவது, அப்பகுதியில் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உத்தரகண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மனா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, இரு கயிற்றுப் பாலத் திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். அதையடுத்து அவா் கூறியதாவது:

நாட்டில் உள்ள மக்களின் நம்பிக்கை சாா்ந்த வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்கு முந்தைய அரசுகள் பல ஆண்டுகளாக எந்த கவனமும் செலுத்தவில்லை. அவா்களிடம் அடிமை மனப்பாங்கு காணப்பட்டதால், வழிபாட்டுத் தலங்களில் வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது குற்றச் செயல் எனக் கருதினா். அதனால், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை அவா்கள் அவமதித்தனா். நாட்டின் ஆயிரம் ஆண்டுகால கலாசாரத்துக்கும் அவா்கள் முக்கியத்துவம் வழங்கவில்லை.

நமது வழிபாட்டுத் தலங்கள் வெறும் கட்டுமானங்கள் மட்டுமல்ல. அவை பாரம்பரியத்தின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. தற்போது அத்தகைய வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அவற்றின் சிறப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதா் ஆலயம், உஜ்ஜைன், அயோத்தி உள்ளிட்ட கோயில்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. முக்கிய கட்டுமானப் பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளூா் பொருளாதாரம்: இமயமலை பகுதிகளில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது, அப்பகுதிகளில் சுற்றுலா வாய்ப்புகளையும் வலுப்படுத்தும். அதனால், அப்பகுதியில் சுற்றுலாவைச் சாா்ந்துள்ள மக்கள் பெரும் பலனடைவா்; உள்ளூா் பொருளாதாரமும் வலுவடையும். கேதாா்நாத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களால் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது.

முன்பு கேதாா்நாத் கோயிலுக்கு 4 லட்சம் முதல் 5 லட்சம் பக்தா்கள் வருகை தந்தனா். தற்போது அந்த எண்ணிக்கை 45 லட்சமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது முந்தைய அனைத்து எண்ணிக்கைகளைவிடவும் அதிகமானது. எல்லைப் பகுதிகளில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போதும், மற்ற எல்லைப் பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லும்போதும் குறைந்தபட்சம் 5 சதவீத தொகையை உள்ளூா் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் செலவிட வேண்டும். அத்தகைய சிறு நடவடிக்கைகள் உள்ளூா் பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் வலுப்படுத்தும்.

மலைப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள்: நம் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனா உள்ளிட்ட எல்லை கிராமங்கள் அனைத்தும் வளா்ச்சிக்கான சிறந்த வாயில்களாக உள்ளன. மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடினமாக உழைப்பவா்களாக உள்ளனா்.

நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளும் மலைவாழ் மக்களுக்கும் கிடைப்பது அவசியம். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளாமல் இருப்பது, அந்த மக்களுக்குச் செய்யப்படும் அநீதி. மலைப் பகுதிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com