சான் பிரான்ஸிகோ: விளம்பரங்களை வெகுவாகக் கட்டுப்படுத்தும் மை ஏட் சென்டர் என்ற கட்டுப்பாட்டு அமைப்பை கூகுள் அறிமுகப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் விரைவில் கூகுள் தேடல், யூடியூப் மற்றும் டிஸ்கவர் ஆகியவற்றில் பார்க்கும் விளம்பரங்களின் வகைகளை நிர்வகிக்க விளம்பர கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தனது வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.
அதாவது, கூகுள் இணையதளம் மற்றும் செயலிகளில் இனி பயனாளர்கள் தாங்கள் பார்க்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வசதியைப் பெறுவார்கள்.
இது குறித்து கூகுள் கூறியிருப்பதாவது, நீங்கள் அண்மையில் சென்று வந்த கடற்கரை சுற்றுலா குறித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தேடியிருப்பீர்கள். இப்போது சுற்றுலா சென்று வந்துவீட்டீர்கள். இனி உங்கள் இணையப் பக்கத்தில் சுற்றுலா தொடர்பான விளம்பரங்கள் தேவையில்லை. எனவே, மை ஏட் சென்டர் மூலமாக சுற்றுலா தொடர்பான விளம்பரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தி, அதில் இந்த விளம்பரத்தை குறைவாகப் பார்க்கும் வாய்ப்பை தேர்வு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.