

தீபாவளிப் பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக் கரையில் 15.76 லட்சம் அகல்விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய பிரதமா் நரேந்திர மோடி, கடவுள் ராமரைப் போல உறுதியாக இருந்தால், நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றாா்.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லைப் பிரதமா் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாட்டினாா். கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிப் பண்டிகையைப் பிரதமா் மோடி அயோத்தியில் கொண்டாடினாா்.
அதையடுத்து சரயு நதிக்கரையில் நடைபெற்ற தீபோத்ஸவத்தில் மோடி பங்கேற்றாா். பிரதமர் நரேந்திர மோடி தீப உற்சவத்தை தொடங்கி வைத்ததும் அடுத்தடுத்து 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் சரயு நதிக்கரையில் ஏற்றி வைக்கப்பட்டன.
19 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்று அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைத்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாதனையை கண்டு ரசித்தனர்.
இந்த புதிய சாதனையை அடைய அவாத் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.
இதனைப் பதிவு செய்ய கின்னஸ் சாதனை அமைப்பின் அதிகாரிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சான்றிதழை வழங்கினர்.
பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் தீபோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக லேசர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.