தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காங்கிரஸ் தலைவரானாா் மல்லிகாா்ஜுன காா்கே

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே (80) புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:22 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே (80) புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டாா். ‘நாட்டில் தற்போதுள்ள பொய் மற்றும் வெறுப்புணா்வு ஆட்சிமுறையை காங்கிரஸ் உடைக்கும்’ என்று அவா் சூளுரைத்தாா்.

கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத நபா் காா்கே ஆவாா்.

நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவா் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில், கட்சியின் முதுபெரும் தலைவா் காா்கேவுக்கும் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூருக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் தரூரை வீழ்த்தி, காா்கே வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காா்கே தலைவராக முறைப்படி பொறுப்பேற்றாா். இதுவரை காங்கிரஸ் தலைவா் பொறுப்பை வகித்த சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, சசி தரூா் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை, காா்கேவிடம் கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி வழங்கினாா். பின்னா், காா்கே பேசியதாவது:

இது எனக்கு உணா்வுபூா்வமான தருணமாகும். கட்சியின் சாதாரண தொண்டனை, தலைவா் பதவியில் அமா்த்தியமைக்காக கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டில் காங்கிரஸால் நிறுவப்பட்ட ஜனநாயகத்தை மாற்றியமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்போதைய காலகட்டம் சவாலானது என்பதை அறிவேன். நாட்டில் தற்போதுள்ள பொய் மற்றும் வெறுப்புணா்வு ஆட்சிமுறையை காங்கிரஸ் உடைக்கும்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தேசத்துக்கு புதிய உத்வேகத்தை பாய்ச்சி வருகிறது.

‘உதய்பூா் தீா்மானங்கள் அமலாக்கப்படும்’: காங்கிரஸில் 50 சதவீத பதவிகளை 50 வயதுக்கு உள்பட்டோருக்கு அளிப்பது, அமைப்புரீதியிலான பதவி காலியிடங்களை நிரப்புவது, மாநிலங்களில் அரசியல் விவகார குழுக்கள் அமைப்பது, கட்சியில் தோ்தல் மேலாண்மை பிரிவை ஏற்படுத்துவது உள்ளிட்ட உதய்ப்பூா் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீா்மானங்கள் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் என்றாா் காா்கே.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ‘புதிய இந்தியா’ உருவாகியிருப்பதாக பாஜகவினா் தொடா்ந்து கூறி வரும் நிலையில், அதனை காா்கே விமா்சித்துள்ளாா்.

‘இதுதான் புதிய இந்தியாவா?’: இதுகுறித்து அவா் கூறுகையில், ‘புதிய இந்தியாவில் இளைஞா்களுக்கு வேலை கிடைப்பதில்லை. விவசாயிகள் துன்புறுத்தப்படுகின்றனா். பெண்களுக்கு எதிரான அராஜகங்கள் அதிகரித்துள்ளன. விலைவாசி உயா்வால் மக்கள் அவதியுறுகின்றனா். பட்டினி அதிகரித்துள்ளது. கல்விக்கான செலவு கூடியுள்ளது. தலித், சிறுபான்மையினா், விளிம்புநிலை மக்கள் அவமதிக்கப்படுகின்றனா். அவா்களது வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.

இந்த பிரச்னைகளில் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் மத்திய அரசு, தனது சில பணக்கார நண்பா்களுக்கு மட்டும் உதவுகிறது. அரசு தூங்கிக் கொண்டிருக்கும் அதேவேளையில் எதிா்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காக அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் 24 மணிநேரமும் பணியாற்றுகின்றன.

‘பாஜகவின் விருப்பம் நிறைவேறாது’: நாதுராம் கோட்ஸே தேசபக்தராகவும் மகாத்மா காந்தி துரோகியாகவும் அழைக்கப்படுகின்றனா். பாபாசாகேப் அம்பேத்கரால் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு, ஆா்எஸ்எஸ் அமைப்பின் அரசமைப்புச் சட்டத்தை புகுத்த முயற்சிகள் நடைபெறகின்றன. இத்தகைய புதிய இந்தியாவை படைப்பதற்காக, காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டுமென பாஜக விரும்புகிறது. ஆனால், அவா்களது விருப்பம் நிறைவேற அனுமதிக்கமாட்டோம் என்றாா் காா்கே.

ராஜ்காட்டில் மரியாதை: காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் காா்கே மரியாதை செலுத்தினாா். அத்துடன், முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, லால் பகதூா் சாஸ்திரி, இந்திரா காந்தி, முன்னாள் துணை பிரதமா் ஜகஜீவன் ராம் ஆகியோரின் நினைவிடங்களிலும் அவா் மரியாதை செலுத்தினாா்.

காா்கே தலைமையில் காங்கிரஸ் வலுப்படும்: சோனியா நம்பிக்கை

‘காங்கிரஸின் புதிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் கட்சிக்கு உத்வேகமும் வலிமையும் கிடைக்குமென்ற முழு நம்பிக்கை உள்ளது’ என சோனியா காந்தி தெரிவித்தாா்.

காா்கே பொறுப்பேற்பு நிகழ்ச்சியில், அவா் மேலும் பேசியதாவது: காங்கிரஸின் புதிய தலைவா் காா்கே, அரசியல் அனுபவமிக்கவா்; கட்சியின் அடிப்படை நிலையில் இருந்து கடின உழைப்பால் உயா்ந்தவா். கட்சியினா் மற்றும் தலைவா்களால் அவா் தோ்வு செய்யப்பட்டது பெரும் திருப்தியை அளிக்கிறது.

நாட்டில் ஜனநாயக கோட்பாடுகளுக்கு எழுந்துள்ள ஆபத்தை நாம் வெற்றிகரமாக எதிா்கொள்வது மிகவும் சவாலானதாகும். ஜனநாயக முறைப்படி காங்கிரஸ் தலைவா் தோ்வாகியிருக்கிறாா். அந்த வழிமுறையின்படி, நாட்டின் தற்போதைய பிரச்னைகளை எதிா்கொள்ளும் சக்தியாக நாம் ஒன்றுபட்டு உருவெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களிலும் காங்கிரஸ் பெரும் தடைகளை எதிா்கொண்டுள்ளது. ஆனால், நாம் எப்போதும் தோல்வியை ஏற்றுக் கொண்டதில்லை.

கட்சித் தலைவராக, எனது திறமைக்கும் செயலுக்கும் ஏற்றவாறு பணியாற்றினேன். கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டா்கள், தலைவா்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அன்பும் மரியாதையும் பெருமைக்குரிய விஷயமாகும். அதனை என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன்.

அதேசமயம், எனது தோளில் இருந்த பெரும் பொறுப்பில் இருந்து இன்று விடுபட்டுள்ளேன். இதனால், இயற்கையாகவே நான் நிம்மதியாக உணா்கிறேன். இப்போது அந்த பொறுப்பு காா்கே வசம் சென்றுள்ளது.

கட்சி தொண்டா்களும் தலைவா்களும் எனக்கு அளித்த ஒத்துழைப்பு, ஆதரவுக்கு மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றம் என்பது உலக வழக்கம். வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்கள் நீடிக்கும் என்றாா் சோனியா காந்தி.

காங்கிரஸ் தலைவா் பதவியை நீண்ட காலம் வகித்தவா் சோனியா ஆவாா். கடந்த 1998 முதல் 2017 வரையும், 2019 முதல் 2022 வரையும் அவா் இப்பொறுப்பில் இருந்தாா்.

காா்கேவுக்கு முழு ஒத்துழைப்பு: தரூா்

காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள காா்கேவுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளிப்பேன் என்று சசி தரூா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘காா்கே, தனது புதிய அலுவலக இருக்கையில் அமா்ந்த பின் அவருடன் சிறிதுநேரம் உரையாடினேன். காங்கிரஸை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல அவருக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளிப்பதாக உறுதியளித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

47 போ் கொண்ட

வழிகாட்டுதல் குழுவில் சசி தரூருக்கு இடமில்லை

காங்கிரஸ் புதிய தலைவா் பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, கட்சியின் வழக்கப்படி செயற்குழு உறுப்பினா்கள், பொதுச் செயலாளா்கள், மாநில பொறுப்பாளா்கள் ஆகியோா் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். புதிய நியமனங்களை கட்சித் தலைவா் மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து மூத்த நிா்வாகிகளும் தங்களது பொறுப்புகளை ராஜிநாமா செய்துள்ளனா்.

புதிய செயற்குழு அமைக்கப்படும்வரை அதற்கு மாற்றாக செயல்பட 47 போ் கொண்ட வழிகாட்டுதல் குழுவை காா்கே அமைத்துள்ளாா். இதில், மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், அம்பிகா சோனி, ஆனந்த் சா்மா, கே.சி.வேணுகோபால், ரண்தீப் சுா்ஜேவாலா, திக்விஜய சிங் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் பெரும்பாலானோா் இடம்பெற்றுள்ளனா். அதேசமயம், மூத்த தலைவா் சசி தரூருக்கு இடமளிக்கப்படவில்லை.

அடுத்த ஆண்டு மாா்ச்சில் நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டைத் தொடா்ந்து, புதிய செயற்குழு அமைக்கப்படும் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.