எனக்கு தெரியும், நீங்கள் அன்புக்காக அனைத்தையும் செய்தீர்கள்: சோனியா குறித்து பிரியங்கா உருக்கம்!

"உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் அம்மா, உலகம் என்ன சொன்னாலும், நினைத்தாலும், எனக்கு தெரியும், நீங்கள் அனைத்தையும் அன்புக்ககாக செய்தீர்கள்"
எனக்கு தெரியும், நீங்கள் அன்புக்காக அனைத்தையும் செய்தீர்கள்: சோனியா குறித்து பிரியங்கா உருக்கம்!


"உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் அம்மா, உலகம் என்ன சொன்னாலும், நினைத்தாலும், எனக்கு தெரியும், நீங்கள் அனைத்தையும் அன்புக்ககாக செய்தீர்கள்" என்று தனது கணவரின் புகைப்படத்தை சோனியா உயர்த்தி காட்டு புகைப்படத்தை பகிர்ந்து தனது உருக்கமான பதிவை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா.

நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவா் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில், கட்சியின் முதுபெரும் தலைவா் காா்கேவுக்கும் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூருக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் தரூரை வீழ்த்தி, காா்கே வெற்றி பெற்றாா்.

இதனைத் தொடர்ந்து தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காா்கே தலைவராக முறைப்படி பொறுப்பேற்றாா். இதுவரை காங்கிரஸ் தலைவா் பொறுப்பை வகித்த சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, சசி தரூா் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை, காா்கேவிடம் கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி வழங்கினாா். 

கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவரான நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத மல்லிகார்ஜுன் கார்கே ராஜீவ் காந்தியின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படத்தை சோனியா காந்தியிடம் வழங்கினார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கட்சிக்கு தலைமை தாங்கிய சோனியா, தனது கணவரின் புகைப்படத்தை பெற்றுக்கொண்டதும் அதனை உயர்த்திப்பிடித்து காட்டியபோது, கட்சி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

கணவர் ராஜீவ் காந்தி புகைப்படத்தை உயர்த்திப்பிடித்து காட்டிய சோனியா

இந்நிலையில், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில், "உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் அம்மா, உலகம் என்ன சொன்னாலும், நினைத்தாலும், எனக்கு தெரியும், நீங்கள் அனைத்தையும் அன்புக்காக செய்தீர்கள்" என்று தனது பெற்றோர்களான ராஜீவ்காந்தி- சோனியா காந்தி புகைப்படத்தை பகிர்ந்து தனது தாயார் சோனியா குறித்து உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான், சோனியா இந்தியாவை அதன் பல்வேறு வடிவங்களிலும் அதன் புரிந்துகொள்ள முடியாத சமூக-கலாசார-புவியியல் முழுமையிலும் அங்கீகரித்து ஒருங்கிணைத்துள்ளார்.

"அவரது தலையீட்டால், அவர் கட்சியின் அரசியலை காலத்தின் தேவைக்கேற்ப பொருத்தமாகவும் நெகிழ்வாகவும் மாற்றினார், மேலும், தேவை ஏற்படும் போதெல்லாம், அவர் கடினமான மற்றும் தொலைநோக்கு முடிவுகளை எடுத்து எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்தார்." 

இந்த நாட்டின் மீது அவர் கொண்டிருக்கும் ஆழந்த அன்பில் இருந்து தனது அரசியல் உத்வேகத்தைப் பெறுகிறார். மக்களும் அதே அன்பையும், நம்பிக்கையும் அவருக்கு திரும்ப அளித்தனர் என உணர்ச்சிப்பூர்வமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தி 1968 இல் இத்தாலியைச் சேர்ந்த அன்டோனியா மெயினோவை மணந்தார். பின்னர் அவர் தனது பெயரை சோனியா காந்தி என மாற்றிக்கொண்டு, இந்தியாவை தனது இல்லமாக மாற்றினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21 ஆம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். 

இதையடுத்து அரசியலில் இருந்து விலகி இருந்த சோனியா காந்தி  1997 இல் கணவர் ராஜீவ் வழியில் அரசியலுக்கு வந்தார். அடுத்த ஆண்டே கட்சியின் தலைவரானார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்த சோனியா காந்தி, 1998-2017 வரை தலைமை தாங்கினார், கடந்த மக்களவைத் தேர்தலின் தோல்விக்கு தார்மீகப்பொறுப்பேற்று சோனியா பதவி விலகினார். பின்னர் மீண்டும் 2019-22 வரை கட்சியின் இடைக்கால தலைவராக இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com