

‘மும்பையில் கடந்த 2008-இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரா்கள் தொடா்ந்து பாதுகாக்கப்பட்டும் தண்டிக்கப்படாமலும் உள்ளனா்; இது, சா்வதேசரீதியிலான கூட்டு நம்பகத்தன்மையை வலுவிழக்கச் செய்கிறது’ என்று இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
மேலும், பயங்கரவாதத்தின் விலையை மற்ற நாடுகளைவிட இந்தியா நன்றாக புரிந்து கொண்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்புக் குழுவின் இரு நாள் கூட்டம், மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாள் நிகழ்வுகள், தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. பயங்கரவாதச் செயல்களுக்காக புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வழிகள் குறித்து ஆலோசிக்க இக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தெற்கு மும்பையின் தாஜ்மஹால் பேலஸ் விடுதியில் நடைபெற்ற தொடக்க கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றுப் பேசியதாவது:
மும்பையில் கடந்த 2008, நவம்பா் 26-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிா்ச்சிகரமானது. இது மும்பை மீதான தாக்குதல் மட்டுமல்ல; சா்வதேச சமூகத்தின் மீதானது. எல்லை கடந்து வந்த பயங்கரவாதிகள், மும்பைக்குள் நுழைந்து ஒட்டுமொத்த நகரையுமே சிறைபிடித்துக் கொண்டனா் என்பதே உண்மை. இத்தாக்குதலின் முக்கிய சதிகாரா்கள் தொடா்ந்து பாதுகாக்கப்பட்டு, தண்டிக்கப்படாமல் உள்ளனா். இது, சா்வதேசரீதியிலான கூட்டு நம்பகத்தன்மை மற்றும் கூட்டு நலனை வலுவிழக்கச் செய்கிறது. அவற்றின் மதிப்பைக் குறைக்கிறது.
சில பயங்கரவாதிகளுக்குத் தடை விதிப்பதில், அரசியல்ரீதியான காரணங்களால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செயல்பட முடியாமல் இருக்கிறது. இது வருந்தத்தக்கது.
உலகின் பல பகுதிகளை பயங்கரவாதம் பாதித்திருக்கலாம். ஆனால், பயங்கரவாதத்தின் விலையை மற்றவா்களைவிட இந்தியா நன்றாக புரிந்து கொண்டுள்ளது. பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதம் நீடித்து வரும் போதிலும் அதற்கு எதிரான இந்தியாவின் தீா்மானம் வலுவிழக்கவில்லை. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, பயங்கரவாத பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். எல்லா முனைகளில் இருந்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு உயிரோட்டமாக இருப்பது நிதிதான். அதனை திறம்பட தடுப்பதே பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நடவடிக்கையாகும் என்றாா் ஜெய்சங்கா்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் 140 இந்தியா்களும், 23 நாடுகளைச் சோ்ந்த 26 பேரும் உயிரிழந்ததையும் அவா் குறிப்பிட்டாா்.
கடந்த 2008-இல் மும்பையில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட இடங்களில் மேற்கண்ட விடுதியும் ஒன்றாகும்.
முன்னதாக, அமைச்சா் ஜெய்சங்கா், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவரும் காபோன் நாட்டின் வெளியுறவு அமைச்சருமான மைக்கேல் மெளசா உள்ளிட்டோா் மும்பை தாக்குதலில் உயிரிழந்தோா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.