தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஹிஜாப் வழக்கை அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றவும்: உச்சநீதிமன்றத்தில் மனுதாரா் வேண்டுகோள்

ஹிஜாப் வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பில் புதன்கிழமை வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 7:50 pm

DIN

ஹிஜாப் வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பில் புதன்கிழமை வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று கடந்த பிப்.5-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாநில உயா்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட பலா் மனுத் தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. அப்போது முஸ்லிம் மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான வழக்கம் அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சிலா் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

அந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞா் தேவதத் காமத் வாதிடுகையில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 19, 21 அல்லது 25-இன் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பயன்படுத்தி ஹிஜாப் அணிய ஒரு பெண் முடிவு செய்தால், அவரின் உரிமைகளை மறுக்கும் வகையில் அதற்கு மாநில அரசு தடை விதிக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கூறுகையில், ‘ஹிஜாப் அணிவதற்கு எவரும் தடை விதிக்கவில்லை. அதனை எங்கு வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம். இந்த வழக்கில் பள்ளிகளில் மட்டும்தான் ஹிஜாபுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன் மீதுதான் உச்சநீதிமன்றம் கவனம் செலுத்துகிறது’ என்று தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து, வழக்குரைஞா் தேவதத் காமத் வாதிடுகையில், ‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவா்கள் சீருடை அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 19, 21, 25 ஆகியவை குடிமக்களுக்கு சில உரிமைகளை வழங்கியுள்ளன. அந்த உரிமைகளுக்கு நியாயமான முறையில் இடமளிக்கும் தனது கடமையிலிருந்து மாநில அரசு தவறிவிட்டதா என்ற அடிப்படை கேள்வியை இந்த வழக்கு உள்ளடக்கியுள்ளது.

இந்த வழக்கை அரசமைப்பு சட்டப்பிரிவு 145(3)-இன் கீழ், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வியாழக்கிழமை (செப்.8) தொடரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.