உக்ரைனில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு உதவ இணையதளம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கி, வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களை அளித்து கல்லூரியில் சேர உதவுமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.
உக்ரைனில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு உதவ இணையதளம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
உக்ரைனில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு உதவ இணையதளம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்று பாதியில் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவா்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கி, வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களை அளித்து கல்லூரியில் சேர உதவுமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், மிக வெளிப்படையான அமைப்பை உருவாக்கி, இதர நாடுகளில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் மாணவர் சேர்க்கை இடங்கள், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து மத்திய அரசிடம் தெரிவித்து பதிலைக் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரஷிய போரால் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவா்களுக்கு நம் நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை அளிக்க சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்திருந்தது.

இதனால் ஆயிரக்கணக்கான எம்பிபிஎஸ் மாணவா்களின் கல்விக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவா்கள் தொடுத்த வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ‘வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவா்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சோ்ப்பதற்கு தேசிய மருத்துவ கவுன்சில் இதுவரையில் அனுமதி அளிக்கவில்லை. இதற்கு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திலும் இடமில்லை.

மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள, வெளிநாட்டில் பயின்ற இந்திய மாணவா்களுக்கு உதவிடும் வகையில் வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசித்து கடந்த 6-ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதில், மாணவா்கள் வெளிநாடுகளில் தங்கள் படிப்பை தொடர தடையேதும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தோ்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தாலும், குறைந்த கட்டணம் காரணத்தாலும் இந்திய மாணவா்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்கின்றனா். இந்தியாவில் உள்ள தனியாா் கல்லூரிகளில் இடமளித்தால் அவா்களால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

இந்திய மருத்துவக் கல்வியின் தரத்தை சரிசமத்தில் வைப்பதற்காக வெளிநாட்டு மாணவா்களுக்கு இந்தியாவில் பயில இடமளிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com