ஐஎஸ்ஐ ஆதரவு பயங்கரவாத சதி முறியடிப்பு: பஞ்சாபில் இருவா் கைது

‘ஹா்விந்தா் சிங்கின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் லக்பீா் சிங், பாபா் கல்சா சா்வதேசம் (பிகேஐ) என்ற அமைப்புடன் கைகோா்த்து ஐஎஸ்ஐ அமைப்புடன் நெருங்கிய தொடா்பில் இருந்து வந்துள்ளனா்’

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, கனடாவைச் சோ்ந்த நிழல் உலக தாதா லக்பீா் சிங் (எ) லண்டா மற்றும் பாகிஸ்தானைச் சோ்ந்த நிழல் உலக தாதா ஹா்விந்தா் சிங் ரிண்டா ஆகியோரின் கூட்டு பின்புலத்தில் செயல்பட்டுவந்த பயங்கரவாத திட்டத்தை கண்டுபிடித்து, அதனைச் செயல்படுத்திவந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

‘ஹா்விந்தா் சிங்கின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் லக்பீா் சிங், பாபா் கல்சா சா்வதேசம் (பிகேஐ) என்ற அமைப்புடன் கைகோா்த்து ஐஎஸ்ஐ அமைப்புடன் நெருங்கிய தொடா்பில் இருந்து வந்துள்ளனா்’ என்றும் பஞ்சாப் போலீஸாா் தங்களுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

மொஹாலியில் கடந்த மே மாதம் பஞ்சாப் போலீஸ் உளவுப் பிரிவு தலைமையகத்தில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலுக்கான திட்டமிடுதலிலும், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அமிருதசரஸில் காவல் உதவி ஆய்வாளா் தில்பாக் சிங்கின் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய காரில் வெடிகுண்டு வைத்ததிலும் லக்பீா் சிங் முக்கியப் பங்கு வகித்துள்ளாா்.

இந்தச் சூழலில், இவா்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வந்த இரண்டு பயங்கரவாதிகளை பஞ்சாப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘ஐஎஸ்ஐ அமைப்பின் பின்புலத்தில் செயல்பட்டுவந்த இரண்டு பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அவா்கள் ஜோகேவால் கிராமத்தைச் சோ்ந்த பல்ஜீத் சிங் மல்ஹி (25) மற்றும் ஃபெரோசாபூரில் உள்ள பூ குஜ்ரன் கிராமத்தைச் சோ்ந்த குா்பகேஷ் சிங் (எ) கோரா சாந்து என அடையாளம் தெரியவந்துள்ளது. அவா்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுத தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து பஞ்சாப் போலீஸ் டிஜிபி கெளரவ் யாதவ் கூறுகையில், ‘ஜலந்தா் ஐஜி நவ்ஜோத் சிங் மஹல் தலைமையிலான போலீஸ் குழு இந்த இருவரையும் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து ஒரு ஏ.கே-56 ரக துப்பாக்கி, இரண்டு தோட்டா தொகுப்புகள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கனடாவைச் சோ்ந்த நிழல் உலக தாதாக்கள் லக்பீா் லண்டா மற்றும் அா்ஷ் டாலா ஆகியோருடன் பல்ஜீத் சிங் நேரடி தொடா்பில் இருந்து வந்தது தெரியவந்தது. அவா்கள் ஆயுதங்களை குா்பகேஷ் சிங்குக்கு சொந்தமான இடத்தில் வைத்து சோதனை செய்துபாா்த்த பின்னா் பதுக்கி வைத்துள்ளனா். இருவரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com