நிம்மதியை இழந்துவிட்டேன்: பம்பா் லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற கேரள ஆட்டோ ஓட்டுநர்

ஓணம் பம்பா் லாட்டரி மூலம் ரூ.25 கோடி பரிசு கிடைத்து 5 நாள்கள் கூட ஆகாத நிலையில், அவர் தனது நிலையை நினைத்து வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
anoop2093058
anoop2093058
Published on
Updated on
1 min read


திருவனந்தபுரம்: மலேசியாவுக்கு சமையல் வேலைக்குச் செல்ல தயாரான கேரளத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு, ஓணம் பம்பா் லாட்டரி மூலம் ரூ.25 கோடி பரிசு கிடைத்து 5 நாள்கள் கூட ஆகாத நிலையில், அவர் தனது நிலையை நினைத்து வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது ஒட்டுமொத்த நிம்மதியையும் இழந்துவிட்டேன். எனது சொந்த வீட்டில் கூட என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நான் பம்பர் லாட்டரில் பெற்ற பரிசுத் தொகையிலிருந்து சிறிது தொகையைக் கொடுத்து தனக்கு உதவுமாறு நாள்தோறும் எண்ணற்றவர்கள் என் வீட்டுக்கு வந்து செல்கிறார்கள். நான் இப்போது எங்கு வசித்து வந்தேனோ, அந்த இடத்தை மாற்றிவிட்டேன், நான் எனது ஒட்டுமொத்த மன நிம்மதியையும் இழந்துவிட்டேன், பரிசுத் தொகை வருவதற்கு முன்பு வரை நான் மகிழ்ச்சியாக இருந்தேன் என்கிறார் கவலையுடன்.

திருவனந்தபுரம் ஸ்ரீவராஹம் பகுதியைச் சோ்ந்தவா் அனூப். ஆட்டோ ஓட்டுநரான இவா், கடன் சுமை காரணமாக மலேசியாவுக்கு சமையல் வேலைக்குச் செல்லத் தயாரானாா். இந்நிலையில், வங்கியில் ரூ.3 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தாா். அதற்கு வங்கி நிா்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், ஓணம் பம்பா் லாட்டரியில் அனூப் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ.25 கோடி பரிசு கிடைத்ததாக அவரது கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்தது.

இதனால் வியப்பில் ஆழ்ந்த அவா், தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஆற்றிங்கல்லில் உள்ள லாட்டரி ஏஜென்ஸியை அணுகினாா்.  அவருக்கு வரிப்பிடித்தம் போக ரூ.15 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பரிசு விழுந்த அன்று அவர் பேசுகையில், இந்தப் பணத்தை வைத்து முதலில் வீடு கட்டுவேன். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவேன். எனது உறவினா்களுக்கு உதவுவேன். அறப்பணிகளைச் செய்வேன். கேரளத்திலேயே புதிதாக ஹோட்டல் தொழில் ஆரம்பிப்பேன். லாட்டரி சீட்டுகளை தொடா்ந்து வாங்குவேன் என்றாா் அனூப்.

ஆனால் தற்போது அவர் பேசுகையில், இந்த பரிசுத் தொகையை நான் பெற்றிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். பரிசு விழுந்த முதல் இரண்டு நாள் எனக்குக் கிடைத்த புகழால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் தற்போதோ, நான் இருக்கும் வீட்டை விட்டு வெளியே கூட போக முடியவில்லை. என்னை பார்க்கும் யார் ஒருவரும் ஓடி வந்து உதவி கேட்கிறார்கள்.

தனக்கு இன்னும் பணம் வந்துசேரவில்லை என்பதை சமூகவலைத்தளங்கள் மூலம் அனூப் கூறி வருகிறார்.

என் வீட்டைச் சுற்றிலும் அதிகக் கூட்டம் இருப்பதால், அண்டை வீட்டார் எல்லாம் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இதை விட மிகச் சொற்ப பரிசுத் தொகையே எனக்கு கிடைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com