நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகல தொடக்கம்!

நாடெங்கிலும் ஒன்பது நாள்கள் நடைபெறும் நவராத்திரி விழா இன்று கோலாகலமாகவும், உற்சாகமாகவும் தொடங்கியுள்ளது. 
நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகல தொடக்கம்!
Published on
Updated on
1 min read

நாடெங்கிலும் ஒன்பது நாள்கள் நடைபெறும் நவராத்திரி விழா இன்று கோலாகலமாகவும், உற்சாகமாகவும் தொடங்கியுள்ளது. 

இந்த ஆண்டு, நவராத்திரி செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஒன்பது நாள்கள்  கொண்டாடப்படுகிறது. 

தமிழர்களின் பண்பாடு, கலசாரத்தின் அடிப்படையில் தோன்றிய அனைத்து பூஜைகளும், திருவிழாக்களும் ஏதாவது ஒரு தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அத்தகைய திருவிழாக்களில் மிகவும் முக்கியமான திருவிழாவாகக் கருதப்படும் விழா, பெண்களைப் போற்றும் மகத்தான திருவிழாவான நவராத்திரி. 

அம்பாளுக்கு நான்கு மாதங்களில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. அவை ஆவணி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்கள் ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்கள் சாரதா நவராத்திரி. தை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்கள் மகா நவராத்திரி. பங்குனி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்கள் வசந்த நவராத்திரி. 

இந்த நான்கு நவராத்திரிகளில் புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்தியை தமிழ்நாடு, கேரளா மற்றும் வடமாநிலங்களில் மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் சரஸ்வதி பூஜையாகவும், வடநாட்டில் துர்க்கா பூஜையாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 

துர்க்கையின் அவதாரம்

தேவர்கள், முனிவர்கள் மட்டுமல்லாமல் மக்களுக்கும் எண்ணிலடங்கா தொல்லைகளைக் கொடுத்துவந்த மகிஷாசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய பார்வதி தேவி ஊசி முனையில் நின்று 9 நாள்களும் தவம் செய்து பலம் பெறுகிறார். நவசத்தியாகவும், நவதுர்க்கையாகவும் அவதாரமெடுக்கிறாள். 

பார்வதிதேவி தவம் செய்த இந்த 9 நாள்களும் நவராத்திரி என்றழைக்கப்படுகிறது. நவராத்திரியின் 9 நாள்களும் பெண்கள் தூய்மையான ஆடையுடுத்தி, கொலுவுக்கு வரும் சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் அம்பாளே தன் வீட்டுக்கு வந்ததாக எண்ணி வரவேற்றும் அகம் மகிழ்வர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள திரிகூட மலையில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தில் நவராத்திரி முதல் நாளான இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதே போன்று மும்பை தேவி கோயிலிலும், தில்லி ஜாண்டேவாலன் கோயிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com