பாஜகவால் திட்டமிட்டு வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது: சரத் பவார்

சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதும், நல்லிணக்கத்தை பேணுவதும் சவாலாக உள்ளதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதும், நல்லிணக்கத்தை பேணுவதும் சவாலாக உள்ளதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா சனிக்கிழமை சாங்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், “
கடந்த காலங்களில் அரசியல் என்பது மக்களை இணைக்கும் வகையில் இருந்தது. ஆனால் இப்போது நாட்டில் மதத்தின் அடிப்படையில் அவர்களை பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

“மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி அதைக் கட்டியெழுப்ப பாடுபட்டனர். ஆனால் இன்றைக்கு மகாத்மா காந்தி போன்ற தேசிய தலைவர்களை அவதூறு செய்ய முயற்சி நடந்து வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “பாஜக ஆளும் கர்நாடகத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடைகளில், எதையும் வாங்க வேண்டாம் என, சில அமைப்புகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. இவற்றுக்கு மத்தியில் நாடு எப்படி முன்னேறும், எப்படி நல்லிணக்கத்தை பேணுவது என்பது கேள்வியாக உள்ளது. மதவெறிக்கு எதிராக போராடுவதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்” என சரத்பவார் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com