
கோப்புப்படம்
தில்லியில் வேகமாக வந்த கார் பள்ளி மாணவிகள் மீது மோதியதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மூன்று மாணவிகள் மீது, வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் எல்பிஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி சக்கரங்களுக்கு அடியில் சிக்கி ஒரு மாணவி உயிரிழந்தார்.
சாலை விபத்தில் உயிரிழந்த மாணவி மனிஷா குமாரி(18) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற மாணவிகளான கல்பனா மற்றும் சஞ்சனா ஆகிய இருவரும் அருகில் உள்ள பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து காவல்துறை துணை ஆணையர் சமீர் சர்மா கூறுகையில்,
இன்று காலை 8.08 மணியளவில் சாலை விபத்து குறித்து பஸ்சிம் விஹார் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.
ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே இறந்ததால், போலீசார் அவரது உடலை சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விதிமீறலில் ஈடுபட்ட வாகனத்தை போலீஸ் காவலில் எடுத்துள்ளது. வாகன ஓட்டுநர் தப்பியுள்ளார். வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரைக் கண்டுபிடிக்க 2 பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.