
தில்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது.
தில்லியில் உள்ள ஜஹாங்கீர்பூர் பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்து அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பிரனர் இடையே மோதல் ஏற்பட்டது.
படிக்க | மத்தியப் பிரதேச வன்முறை: 8 நாள்களுக்குப் பிறகு முதல் பலி
மோதலின்போது இரு தரப்பினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அப்போது அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருந்த நபர் எதிர்தரப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு மத்தியில் கைகளில் துப்பாக்கியை ஏந்தி சுடும் காட்சிகள் விடியோவாக பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தில் பதிவு செய்யப்பட்ட விடியோ ஏப்ரல் 17ஆம் தேதி முதல் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.
படிக்க | அனுமன் ஜெயந்தி வன்முறை: மத ஊர்வலத்தில் ஆயுதங்கள் எதற்கு?
விடியோ அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வடமேற்கு தில்லி காவல் துறையினர், பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு துப்பாக்கியுடன் இருந்த நபரைக் கண்டறிந்தனர்.
தில்லி சிடி பூங்காவிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு துப்பாக்கியுடன் இருந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் 28 வயதான சோனு அலியாஸ் என்று தெரியவந்துள்ளது.