உக்ரைன் விவகாரத்தில் இந்திய நிலைப்பாடு: நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்தியாவின் நிலைப்பாடானது, அதன் அண்டைநாடுகளுடன் உள்ள பாதுகாப்பு சவால்களை முன்னிறுத்தும் வகையில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)
நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)

வாஷிங்டன்: ரஷியா-உக்ரைன் போர் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடானது, அதன் அண்டைநாடுகளுடன் உள்ள பாதுகாப்பு சவால்களை முன்னிறுத்தும் வகையில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும், இந்தியாவில் அதற்கு ஒரு நண்பர் இருந்தால், அந்த நண்பன் பலவீனமான நண்பனாக இருக்க முடியாது, மற்றும் அந்த நண்பனை பலவீனமாகவும் விடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்று வரும் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியின் 2022-ஆம் ஆண்டு வசந்தகால கூட்டத்தின் ஒரு பகுதியாக, எஃப்ஏடிஎஃப் அமைச்சா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. 

இந்த அமெரிக்க பயணத்தின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அளித்த விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், இந்தியாவும் உண்மையிலேயே நண்பனாக இருக்கவே விரும்புகிறது. ஆனால், அமெரிக்காவும் நண்பனை விரும்பினால், அந்த நண்பன் பலவீனமாக இருக்கக் கூடாது, நண்பனை பலவீனமாக்கவும் விடக்கூடாது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, எஃப்ஏடிஎஃப் அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்ற நிா்மலா சீதாராமன் பேசியது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டவிரோத பணப் புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதற்கு எதிராக இந்தியா தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நிதியமைச்சா் மறு உத்தரவாதம் அளித்ததோடு, எஃப்ஏடிஎஃப் பங்கை வெகுவாகப் பாராட்டினாா். குறிப்பாக, சொத்து மீட்பு மற்றும் ஆதாயம் பெறுவோா் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட எஃப்ஏடிஎஃப் அமைப்பின் பணிகளை அவா் பாராட்டினாா்.

அதனைத் தொடா்ந்து, 2022-24-ஆம் ஆண்டுக்கு எஃப்ஏடிஎஃப் முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டப் பணிகள் மற்றும் அந்த திட்டப் பணிகளுக்கு தொடா்ந்து நிதி அளிக்கப்படுவதை உறுதிப்படுத்துதல், குற்றவாளிகளின் சொத்துக்களை மேலும் திறம்பட மீட்கும் வகையில் எஃப்ஏடிஎஃப் அமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து அமைச்சா்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, எஃப்ஏடிஎஃப் அமைப்புக்குத் தேவையான வளங்களையும் ஆதரவையும் இந்தியா தொடா்ந்து வழங்கும் என்று நிா்மலா சீதாராமன் உறுதியளித்தாா் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) சட்ட விரோத பணப் புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கான, பன்னாட்டு அரசுகளிடையிலான அமைப்பாக கடந்த 1989-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பு 39 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ளது.

சட்டவிரோத பணப் புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை ஆய்வு செய்யவும் தடுக்கவும் தவறியதற்காக பாகிஸ்தானை கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த அமைப்பு கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. அதுபோல வடகொரியா, ஈரான் நாடுகளையும் இந்த அமைப்பு கருப்புப் பட்டியலில் வைத்திருந்தது. அவ்வாறு கருப்புப் பட்டியலில் வைக்கப்படும் நாடுகள் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற சா்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து கடனுதவி பெறுவதற்குத் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com