சென்னை 2-ஆவது விமான நிலையம் எங்கு அமைக்கப்படும்?: மத்திய அமைச்சர் பதில்

சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டம், பரந்தூர் அல்லது பன்னூரில் அமைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
சென்னை 2-ஆவது விமான நிலையம் எங்கு அமைக்கப்படும்?: மத்திய அமைச்சர் பதில்


புது தில்லி: சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டம், பரந்தூர் அல்லது பன்னூரில் அமைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் மதுரை விமான நிலையம் இரவு நேரத்தில் இயங்காதது குறித்தும், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கான இடத் தேர்வு நீண்ட நாள் நிலுவையில் இருப்பது குறித்தும் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் மூலம் தெரிவித்துள்ள பதில் வருமாறு:  மதுரை விமான நிலையத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு 633.17 ஏக்கர் நிலம் தேவை. இதற்கு 528.6 ஏக்கர் நிலம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 104.5 ஏக்கர் நிலம் குளம், விவசாய நிலம் போன்றவையாக உள்ளன. இந்த நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், கண்காணிப்புக் கோபுரம், பயணிகள் - சரக்கு முனையக் கட்டடம், கார் நிறுத்தும் இடம் உள்ளிட்ட  கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்.

சென்னையின் 2-ஆவது விமான நிலையத்துக்கு மாநில அரசு திருப்போரூர், பரந்தூர், படாலம், பன்னூர் ஆகிய  4 இடங்களை அடையாளப்படுத்தியது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்பக் குழுவும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ) அதிகாரிகளும் கடந்த பிப்ரவரி மாதம் இந்த இடங்களை ஆய்வு செய்தனர்.

இதில், பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரு இடங்கள் வான்வெளியின் தன்மைக்கு  ஒப்பீட்டளவில் மிகவும் சாத்தியமானதாக உள்ளன. குறிப்பாக, இயற்கைத் தடைகளற்றவையாக உள்ளன. இருப்பினும், மனிதத்  தடைகள் உள்ளன. ஏரிகள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்ற இடையூறுகள் விமானப் போக்குவரத்துக்குத் தடையாக இருப்பவை. இதனால், மேற்பரப்பு தடை வரம்பு ஆய்வு (ஓஎல்எஸ்), தள ஆய்வு  போன்ற முன் சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கை தமிழக அரசுக்கு (டிட்கோ) அனுப்பப்பட்டுள்ளது. இதில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சிந்தியா அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com