சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: சஞ்சய் ரெளத்துக்கு ஆக.8 வரை அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பு

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்தின் அமலாக்கத் துறை காவலை வரும் 8-ஆம் தேதி வரை நீட்டித்து, சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: சஞ்சய் ரெளத்துக்கு ஆக.8 வரை அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பு

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்தின் அமலாக்கத் துறை காவலை வரும் 8-ஆம் தேதி வரை நீட்டித்து, சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதில், சஞ்சய் ரெளத், அவரது குடும்பத்தினா் தொடா்புடைய பணப் பரிவா்த்தனைகள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத் துறையினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அன்று நள்ளிரவில் அவா் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவருக்கு ஆகஸ்ட் 4 வரை அமலாக்கத் துறை காவல் விதிக்கப்பட்டது.

இந்த காவல் முடிந்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ரெளத் வியாழக்கிழமை மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, சஞ்சய் ரெளத்தின் காவலை ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே உத்தரவிட்டாா். அமலாக்கத் துறை விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு, சஞ்சய் ரெளத்தின் காவலை நீட்டிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

முன்னதாக, அமலாக்கத் துறை மீது புகாா் ஏதும் இருக்கிா? என்று சஞ்சய் ரெளத்திடம் நீதிபதி கேட்டாா். அதற்கு, காற்றோட்டமே இல்லாத அறையில் தன்னை வைத்திருந்ததாக ரெளத் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து, அமலாக்கத் துறை வழக்குரைஞா் கூறுகையில், ‘சஞ்சய் ரெளத் வைக்கப்பட்டிருந்த அறை குளிா்சாதன வசதியுடையது என்பதால் ஜன்னல்கள் இல்லை. இனி காற்றோட்டமான அறையில் அவா் தங்க வைக்கப்படுவாா்’ என்றாா்.

ரெளத் மனைவிக்கு அழைப்பாணை: இதனிடையே, அமலாக்கத் துறை முன் விசாரணைக்கு ஆஜராகும்படி சஞ்சய் ரெளத் மனைவி வா்ஷா ரெளத்துக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

‘சஞ்சய் ரெளத், இதர குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் மற்றும் வா்ஷா ரெளத் ஆகியோரிடம் ஒன்றாக விசாரணை மேற்கொள்ளப்படும்; மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இந்த வார இறுதியில் விசாரணை நடைபெறும்’ என்று அவா்கள் கூறினா்.

முன்னதாக, வா்ஷா ரெளத் மற்றும் சஞ்சய் ரெளத்தின் இரு உதவியாளா்களுக்கு சொந்தமான ரூ.11.15 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத் துறையால் கடந்த ஏப்ரலில் முடக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com