குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு: பிரதமர், எம்.பி.க்கள் வாக்களித்தனர்

நாட்டின் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு: பிரதமர், எம்.பி.க்கள் வாக்களித்தனர்

நாட்டின் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து பிற எம்.பி.க்கள் வாக்களித்து வருகின்றனர். 

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) களத்தில் உள்ளனா்.

குடியரசுத் தலைவா் தோ்தலைப் போல் அல்லாமல், இத்தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பாா்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க தகுதி பெற்றவா்களாவா். எம்.பி.க்கள் வாக்களிக்க வசதியாக, நாடாளுமன்றத்தில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னா், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். 

இதில் மக்களவை உறுப்பினர்கள் 543, மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். பாஜகவிடமே போதிய எம்.பி.க்கள் உள்ள நிலையில் வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மாா்கரெட் ஆல்வாவுக்கு 200 வாக்குகளுக்கு மேல் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளும் ஆல்வாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

23 எம்.பி.க்களைக் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி, குடியரசு துணைத் தலைவா் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com