
அனைத்து விதமான மின்னணு சாதனங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் பொதுவான சார்ஜரை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மொபைல் போன், லேப்டாப், இயர்பட், டேப்லட், ஸ்பீக்கர் என ஒவ்வொரு மின்னணு சாதனங்களுக்கு ஒவ்வொரு விதமான சார்ஜர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால், அதிகளவிலான மின்னணு கழிவுகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் நோக்கில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் அனைத்து தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தும் கூட்டத்திற்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய நுகர்வோர் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட், இயர்பட் போன்ற மின்னணு சாதனங்களுக்கு பயன்படுத்துவதற்கு பொதுவான சார்ஜரை ஒழுங்குபடுத்துவதற்கான நேரம் இது. சிறிய வகை, பெரிய வகை என இரண்டே வகையில் பொதுவான சார்ஜரை வடிவமைக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். இதுகுறித்து ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், மின்னணு தயாரிப்பு நிறுவனத்தினர் மற்றும் முக்கிய தொழில் சங்கங்கள் கலந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நிறைவடைந்தன காமன்வெல்த் போட்டிகள்: இந்திய அணி சாதித்தது என்ன?
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை மாநிலங்களவையில் எம்.பி. சுஷில் குமார் மோடி பேசுகையில், “2024ஆம் ஆண்டிற்குள் மொபைல் போன், லேப்டாப் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர் பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. அதேபோல், நாமும் ஒரே சார்ஜரை பயன்படுத்தும் தேவை எழுந்துள்ளது” என்றார்.
மேலும், மத்திய அரசின் தரவுகளின்படி, 2019 முதல் 2020-க்குள் மின்னணு கழிவுகள் 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. 25 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் தான் முறையாக அகற்றப்பட முடியும் எனத் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...