நீட், ஜேஇஇ தேர்வுகளை சியுஇடி தேர்வுடன் இணைக்க யுஜிசி திட்டம்

மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுடன் இணைக்கும் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்  குழு முன்வைத்துள்ளது.
நீட், ஜேஇஇ தேர்வுகளை சியுஇடி தேர்வுடன் இணைக்க யுஜிசி திட்டம் (கோப்புப்படம்)
நீட், ஜேஇஇ தேர்வுகளை சியுஇடி தேர்வுடன் இணைக்க யுஜிசி திட்டம் (கோப்புப்படம்)


புது தில்லி: மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுடன் இணைக்கும் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்  குழு முன்வைத்துள்ளது.

அதாவது, பனிரெண்டாம் வகுப்பில் கணிதம், உயிரியியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட நான்கு பாடங்களை எடுத்துப் படித்தவர்கள் மூன்று விதமான நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.

நீட், ஜேஇஇ, சியுஇடி தேர்வுகளை ஒன்றிணைத்து, இந்த மூன்று நுழைவுத் தேர்வுகளுக்கும் மாற்றாக ஒரே நுழைவுத் தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர் அவர்கள் விரும்புய படிப்பில் சேரும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை யுஜிசி செய்து வருவதாக அதன் நிர்வாகி ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஒரே பாடத்தைப் படித்து, பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டியிருப்பதால் மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தேர்வுகள் தேதி, தேர்வு மையங்கள் போன்றவை தேர்வெழுதுபவர்களுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது.

ஒரே பாடத்துக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவது என்பது அவசியமில்லை. ஒரே ஒரு நுழைவுத் தேர்வை எழுதி, அதைக் கொண்டு எந்த படிப்பிலும் சேரும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் மற்றும் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வான சியுஇடி ஆகிய மூன்று நுழைவுத் தேர்வுகளும் நம் நாட்டைப் பொறுத்தவரை நடைபெறும் மிக முக்கியமான மூன்று நுழைவுத் தேர்வுகளாகும்.

இதனை கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 43 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் குறைந்தபட்சம் இரண்டு நுழைவுத் தேர்வுகளையாவது எழுதுகிறார்கள். ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு இயற்பியல், வேதியியல், கணிதவியல் பாடங்களும், நீட் நுழைவுத் தேர்வுக்கு கணிதத்துக்கு மாற்றாக உயிரியியல் பாடத்தில் தேர்வு நடைபெறும். சியுஇடி நுழைவுத் தேர்வில் இடம்பெற்றுள்ள 61 பாடப்பிரிவுகளில் இந்த பாடங்களும் அடங்கும்.

எனவே, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை சியுஇடி தேர்வுடன் ஒன்றிணைத்து நடத்தினால், இந்த நான்கு பாடங்களை தேர்வு செய்து நுழைவுத் தேர்வெழுதும் மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேரலாம். இரண்டும் கிடைக்கவில்லையென்றால், பொதுவான கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com