எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி பெயரில் ஒரு நகர்ப் பகுதியை அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர். திறந்துவைத்திருப்பாரா? அதுவும் சென்னை மாநகரில்?
கருணாநிதிபுரத்தைத் திறந்துவைத்த எம்.ஜி.ஆர்.
கருணாநிதிபுரத்தைத் திறந்துவைத்த எம்.ஜி.ஆர்.

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி பெயரில் ஒரு நகர்ப் பகுதியை அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர். திறந்துவைத்திருப்பாரா? அதுவும் சென்னை மாநகரில்?

ஆம், திறந்துவைத்திருக்கிறார். ஆனால், அதெல்லாம் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்குவதற்கு முன்னால், 1971-ல்.

துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திமுக முதன்முதலாகத் தமிழகத்தில் அரசு அமைக்கக் காரணமான, 1967 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர்.

திமுக அரசில் முதல்வராகப் பொறுப்பேற்ற சிறிது காலத்தில் அண்ணா மறைந்த நிலையில், தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார்.

இந்தக் காலகட்டத்தில்தான், தன்னுடைய பரங்கிமலைத் தொகுதியில் திரு.மு. கருணாநிதிபுரம் என்ற குடியிருப்புப் பகுதியைத் திறந்துவைத்தார் எம்.எல்.ஏ.வும் திமுக பொருளாளருமான எம்.ஜி.ஆர். இந்த விழாவில் அப்போது அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்துவும் கலந்துகொண்டிருக்கிறார் (விழாவில் எடுக்கப்பட்ட அபூர்வமான படம் மேலே - தினமணி புகைப்படக்  கருவூலத்திலிருந்து - படத்திலிருக்கும் மற்றவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்).

அண்மையில் வெளிவந்த ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தில், இந்தக் கருணாநிதிபுரம் திறப்பு விழாவில் எம்.ஜி.ஆர். பேசியதை மேற்கோள் காட்டியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

எம்.ஜி.ஆருக்கு ரசிகனும் விமர்சகனுமாய்…! என்ற தலைப்பிலான இந்தப் பகுதியில், 'புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களும் தலைவர் அவர்களும் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இருவரும் நகமும் சதையுமாக இருந்தவர்கள்!' என்று தொடங்கிப் பல்வேறு விஷயங்களை நினைவுகூறும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்:

"1971 ஆம் ஆண்டு தனது பரங்கிமலைத் தொகுதியில் “கருணாநிதிபுரம்” என்று ஒரு பகுதிக்குப் பெயரினைச் சூட்டி, அதற்கான பெயர்ப் பலகையினை அவரே திறந்துவைத்தார்.

அந்த விழாவில் அவர் பேசியது மறக்கக் கூடிய பேச்சா?

“தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன்.

ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டுக் கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். என் வீடு என்றால் அப்போது 12 ரூபாய் வாடகை வீடுதான், அதில் நாங்கள் ஒன்றாக இருந்தோம்.

ஆனால், அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க நான் முயற்சித்தேன்.

ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று?

நான்தான் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.

கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு போன்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார். அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை.

இப்படிப் பிரபலப்படுத்தப்படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை, திறமையை காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். தன் பெயர் வரவில்லை என்றாலும் தன் கருத்து வந்திருக்கிறது என்கிற திருப்தியில் உழைத்தார்.

அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துகளைப் படங்களில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை. தனக்கென ஒரு கொள்கை. தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக்கொண்டு பற்றோடும் பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர்” என்றெல்லாம் பாராட்டிப் பேசியவர் எம்.ஜி.ஆர். அவர்கள் - என்று குறிப்பிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் இந்தப் பகுதி கருணாநிதிபுரம் என்றே (வசதி கருதியோ என்னவோ முன்னொட்டான திரு.மு. என்பதைச் சேர்த்துக் குறிப்பிடுவது குறைந்துவிட்டிருக்கிறது) அழைக்கப்படுகிறது. ஆனால், இதைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர். என்பது இந்தத் தலைமுறையினர் பலருக்கும் தெரியவில்லை (ஓராண்டு தாண்டிவிட்டாலும்கூட பொன்விழா கொண்டாடலாம்!).

பரங்கிமலைத் தொகுதியில் உள்ளகரம் - புழுதிவாக்கம் கிராமத்தில் இடம் பெற்ற புறநகர்ப் பகுதியான திரு.மு. கருணாநிதிபுரம் தற்போது பக்கா நகர்ப் பகுதியாகிவிட்டது. சோழிங்கநல்லூர் தொகுதியில், சென்னை மாநகராட்சியில்  புழுதிவாக்கம் - 169-வது வார்டில் இடம் பெற்றிருக்கிறது. இந்தக் கருணாநிதிபுரத்தில் எம்.ஜி.ஆர். தெருவும் இருக்கிறது. சென்னை - 61 ஆக இருந்தது தற்போது சென்னை - 91!

வழக்கமாக எதற்காகப் பெயர் சூட்டினார்களோ, அந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில், மக்களின் புழக்கத்தில் - மாநகர்ப் பேருந்துகளின் சுருக்கும் திறமையில் - ஆளுமைகளின் பெயர்கள் உருமாற்றப்பட்டுவிடும் - கே.கே. நகர், ஜே.ஜே. நகர், எம்.கே.பி. நகர், கே.கே.டி. நகர், எம்.கே. யுனிவர்சிடி என்றெல்லாம் [இவற்றுக்கெல்லாம் வெறுமனே கருணாநிதி நகர், ஜெயலலிதா நகர், பாரதி நகர், கண்ணதாசன் நகர், காமராஜர் பல்கலை. என்றே பெயர் வைத்திருக்கலாம், சுருக்க முடியாமல் என்றும் நிலைத்திருக்கும்!].

ஆனால், எம்.ஜி.ஆர். திறந்துவைத்த இந்தப் பகுதியில் நின்றுநிலவும் சிறப்பு - இதுவும் ட்டி.எம்.கே. புரம் என்று சுருக்கப்பட்டுவிடாமல், நல்லவேளையாக, கருணாநிதிபுரம் என்றே நிலைத்து விளங்குகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com