
மக்களவைத் தேர்தலில், பிகாரில் 35 தொகுதிகளை கைப்பற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய நிதீஷ் குமார், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், தில்லியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பிகார் மாநிலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஜெய்ஸ்வால் பேசியதாவது, மகாகத்பந்தன் கூட்டணி பிகார் மக்களை ஏமாற்றும் கூட்டணி. இந்த கூட்டணிக்கு எதிராக வீதியிலிருந்து சட்டப்பேரவை வரை பாஜக போராட்டம் நடத்தும். வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலில், 35 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க | ரயில்கள் மோதி விபத்து: மகாராஷ்டிரத்தில் 50 பேர் காயம்
பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை கடந்த வாரம் முறித்த நிதீஷ் குமாா், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்த அவர், மாநிலத்தில் மகாகத்பந்தன் கூட்டணி அரசை அமைத்தார்.
முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, 31 பேர் அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.