
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம்? கருத்துக் கேட்கிறது ஆர்பிஐ
மும்பை: எண்ம (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை முறையில், பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, இது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது.
ஆர்பிஐ இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட நடைமுறைகளைக் கொண்டு வருவது குறித்து மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க | ஏலத்தில் வாங்கிய சூட்கேஸ்: திறந்து பார்த்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி
பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து மக்கள் தங்களது ஆலோசனைகள், உரிய கருத்துகளை 2022ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதிக்குள், மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, எண்ம முறையில் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து, தற்போது சிறிய நடைபாதைக் கடைகளில் கூட யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி வந்துவிட்டது. இந்த நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் எண்ம பணப்பரிவர்த்தனை முறைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் ஆர்பிஐ உள்ளது.
பணப்பரிவர்த்தனை முறைகளை ஒழுங்குபடுத்துவது, அதிலிருக்கும் குறைபாடுகளைப் போக்குவது, பணப்பரிவர்த்தனை முறையில் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்ட விஷயங்களிலும் ஆர்பிஐ கவனம் செலுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை முறையில் பல்வேறு இடைத்தரகர்கள் இருந்தாலும் கூட, இந்த பணப்பரிவர்த்தனை சங்கிலி தொடரில் பயனாளர்களின் புகார்கள் பெரும்பாலும் நேரடியான கட்டணங்கள் தொடர்பானதாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...