நூற்றுக்கணக்கான கடன் செயலிகளின் பின்னணியில் சீனம்: மிகப்பெரிய சதி கண்டுபிடிப்பு

நூற்றுக்கணக்கான சீனத்தைச் சேர்ந்த கடன் செயலிகள் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான கடன் செயலிகளின் பின்னணியில் சீனம்
நூற்றுக்கணக்கான கடன் செயலிகளின் பின்னணியில் சீனம்


புது தில்லி: செல்லிடப்பேசி செயலிகளின் வாயிலாக கடன் வழங்கி மோசடியில் ஈடுபடும் கும்பல்களைக் கண்டுபிடிக்க தில்லி காவல்துறையினர் கடந்த இரண்டு மாதங்களாக நடத்திய விசாரணையில் நூற்றுக்கணக்கான சீனத்தைச் சேர்ந்த கடன் செயலிகள் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட சீன கடன் செயலிகளைக் கண்டுபிடித்திருக்கும் தில்லி காவல்துறை இது தொடர்பாக 22 பேரை கைது செய்துள்ளது.

சுமார் 100க்கும் மேற்பட்ட மோசடி செயலிகளை இந்த கும்பல் நிர்வகித்து வந்ததும், (அவை தற்போது முடக்கப்பட்டுள்ளது). பல்வேறு மாநிலங்களில், மக்களின் தகவல்களைத் திருடி கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியிருப்பதும், இந்த செயலிகளுக்குப் பின்னணியில் சீன நிறுவனங்கள் நேரடியாக தொடர்பிலிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை டிசிபி தெரிவித்துள்ளார்.

இந்த சோதனையில், 50 செல்லிடப்பேசிகள், 25 கணினிகள், 9 மடிக்கணினிகள், 19 கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள், 3 கார்கள், 4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செல்லிடப்பேசி செயலிகள் மூலம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உடனடி கடன் வழங்கும் செயலிகள், அதனை திருப்பிச் செலுத்திய பிறகும் வாடிக்கையாளர்கள் துன்புறுத்துவதாகவும், கட்டாதவர்களை மிரட்டப்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையில் இறங்கியது. 

இந்த செல்லிடப்பேசி செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போதே, செல்லிடப்பேசியிலிருக்கும் அனைத்து தொடர்பு எண்கள், புகைப்படக் கேலரி, இதர தகவல்கள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதி கேட்கிறது. இந்த அனுமதி கிடைத்தவுடனே, அந்த செல்லிடப்பேசியிலிருக்கும் அனைத்துத் தகவல்களும் உடனடியாக சீன சர்வர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கடனை கட்டாவிட்டால், அவரது தொடர்பிலிருக்கும் எண்களை தொடர்பு கொண்டு பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது, மார்ஃபிங் செய்த புகைப்படங்களை அனுப்புவதாக மிரட்டுவது என பல முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வெறும் பணத்தை முறைகேடு செய்திருப்பது மட்டுமல்லாமல், பயனாளர்களின் தகவல்களை சீன சர்வரில் சேர்த்திருப்பது தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com