பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை; மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்கள்
விடுதலை செய்யப்பட்டவர்கள்

புது தில்லி: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

11 குற்றவாளிகளும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது குறித்து மத்திய அரசும், குஜராத் அரசும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

2002-ஆம் ஆண்டில் குஜராத் கலவரத்தின்போது, முஸ்லிம் கா்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். மேலும் பில்கிஸ் பானு கண் முன்பே அவருடைய 3 வயது மகள் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொடூரமாக கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதனை மும்பை உயா் நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனா். இதனையடுத்து அவா்களது தண்டனை குறைப்பு மனுவை பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனடிப்படையில், இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 ஆயுள் தண்டனை கைதிகளும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனா். இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இவா்களுடைய விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் மற்றும் வழக்குரைஞா் அபா்னா பட் ஆகியோா், ‘குற்றவாளிகள் எதனடிப்படையில் விடுவிக்கப்பட்டனா் என்பதற்கு எதிராக மட்டுமே மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து அல்ல’ என்றனா். இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுவை விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புக்கொண்டனா்.

இந்த நிலையில், மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது, அப்போது, குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com