ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக ரூ.20 கோடி பேரம்: சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

தங்கள் எம்எல்ஏக்கள் நான்கு பேரை ஈர்க்க பாஜக முயற்சி செய்ததாகவும், அவர்களுக்குத் தலா ரூ. 20 கோடி வழங்க அக்கட்சி முன்வந்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக ரூ.20 கோடி பேரம்: சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

தங்கள் எம்எல்ஏக்கள் நான்கு பேரை ஈர்க்க பாஜக முயற்சி செய்ததாகவும், அவர்களுக்குத் தலா ரூ. 20 கோடி வழங்க அக்கட்சி முன்வந்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங், தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
எங்கள் கட்சியைச் சேர்ந்த அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி, குல்தீப் குமார் ஆகிய நான்கு எம்எல்ஏக்களை பாஜக தலைவர்கள் அணுகியுள்ளனர். இந்த நான்கு பேரும் பாஜகவில் இணைந்தால் தலா ரூ. 20 கோடி தருவதாகவும், மற்ற எம்எல்ஏக்களையும் அவர்கள் அழைத்து வந்தால் தலா ரூ. 25 கோடி தருவதாகவும் பேரம் பேசப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை ஏற்று பாஜகவில் சேராவிட்டால் அவர்கள் தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா போல் பொய் வழக்குகளையும், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாஜக தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே விவகாரத்தில் பாஜக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. ஆனால், எங்கள் கட்சியைச் சேர்ந்த மனீஷ் சிசோடியா விவகாரத்தில் அவர்களின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. தற்போது எங்கள் எம்எல்ஏக்களை ஈர்க்க முயற்சி செய்கின்றனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை அச்சுறுத்தவோ, விலைக்கு வாங்கவோ முடியாது. ஏனெனில் அவர்கள் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்றார்.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "எங்கள் எம்எல்ஏக்களை ஈர்க்க நடந்துள்ள முயற்சி மிகவும் தீவிரமானதாகும்' என்று தெரிவித்தார்.
தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் "சிபிஐ அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியோ பணம் கொடுத்தோ எங்கள் எம்எல்ஏக்களை ஈர்க்க முயற்சிக்க வேண்டாம். எங்கள் எம்எல்ஏக்கள் உயிரைக் கூடத் துறப்பார்களே தவிர கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
பாஜக பதிலடி: ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:
மது விற்பனையை சீர்படுத்த நிபுணர் குழு அளித்த பரிந்துûரையை தில்லி அரசு ஏற்க மறுத்தது. ஆம்ஆத்மிக்கு அதிக கமிஷன் செலுத்திய நிறுவனங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமத்தை வழங்கினர்.
பாஜகவினர் தங்களிடம் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி கூறுகிறது. அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாரா என்றார் அவர்.
தில்லி பேரவை நாளை கூடுகிறது
புது தில்லி, ஆக. 24: தில்லியில் முதல்வர் கேஜரிவால் தலைமையிலான அரசின் கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்திவரும் நிலையில், தில்லி பேரவையின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 26) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தில்லி பேரவைச் செயலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு முதல் சிறப்புப் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் பாஜகவின் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com