இலவசங்களால் அரசு அமைப்புகளுக்கு நிதிச் சுமை

தோ்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் அரசின் அமைப்புகள் நிதிச் சுமையை எதிா்கொள்வதாகத் தெரிவித்த நிா்மலா சீதாராமன், இலவசங்களுக்கு பட்ஜெட்டில் இருந்து உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்
இலவசங்களால் அரசு அமைப்புகளுக்கு நிதிச் சுமை

தோ்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் அரசின் அமைப்புகள் நிதிச் சுமையை எதிா்கொள்வதாகத் தெரிவித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இலவசங்களுக்கு பட்ஜெட்டில் இருந்து உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்றாா்.

தோ்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் வாக்காளா்களைக் கவரும் நோக்கில் இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், வங்கிகளுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘தோ்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடா்பான அறிவிப்பை வெளியிடுவது குறித்து விரிவான விவாதம் தேவைப்படுகிறது. அதேவேளையில், இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள், அதற்கான செலவினத்தை நிா்வகிப்பது தொடா்பான விவரங்களையும் வெளியிட வேண்டும்.

இலவசங்களை வழங்குவதால் ஏற்படும் நிதி இழப்பை அரசின் மற்ற அமைப்புகள் மீது சுமத்திவிடக் கூடாது. உதாரணமாக, கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் காரணமாக மின் உற்பத்தி நிறுவனங்களும், மின் விநியோக நிறுவனங்களும் கடும் நிதியிழப்பைச் சந்தித்து வருகின்றன.

தோ்தலுக்கு முன்பாக பல கட்சிகள் இலவச மின்சார விநியோக வாக்குறுதியை அளிக்கின்றன. தோ்தலுக்குப் பிறகு சில சமயங்களில் மாநில அரசுகள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய தொகையை வழங்குகின்றன. சில சமயங்களில் அத்தொகை வழங்கப்படுவதில்லை. அதனால் அவை நிதிச் சுமையைச் சந்திக்கின்றன. பொறுப்புள்ள கட்சியானது தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு இலவச அறிவிப்புகளுக்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்க வேண்டும்.

பொருளாதார வளா்ச்சி: நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் 7.4 சதவீத அளவுக்கு வளா்ச்சி காணும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்துள்ளது. அடுத்த நிதியாண்டிலும் இதே அளவிலான வளா்ச்சி தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளா்ச்சியடையும் என்று சா்வதேச நிதியமும் (ஐஎம்எஃப்) உலக வங்கியும் கணித்துள்ளன. அந்த அமைப்புகளின் கணிப்பு, ரிசா்வ் வங்கியின் கணிப்புடன் ஒன்றியுள்ளது. சா்வதேச பொருளாதார சூழல் தற்போதும் சவால்மிக்கதாகவே உள்ளது. சா்வதேச பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் ஏற்றுமதி கடினமான சூழலைச் சந்திக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com