
எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? ரிவார்டு புள்ளிகளிலும் வருகிறது மாற்றம்
எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் பொருள்கள் வாங்குவது மற்றும் ஆன்லைனில் செலவிடும் போது கிடைக்கும் ரிவார்டு புள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் புதிய மாற்றம் கொண்டுவரப்படவிருக்கிறது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படும் வாடகைக் கட்டணம் மற்றும் இஎம்ஐயாக மாற்றப்படுவதற்கான பிராஸஸிங் கட்டணங்கள் கடந்த மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த புதிய மாற்றம் வரும் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இதையும் படிக்க.. நாடகம் பார்த்த குற்றத்துக்காக 2 சிறார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
எஸ்பிஐ கார்டு என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகக் கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து செயல்படும் கிரெடிட் கார்டு நிறுவனம், அமேசானில் ஆன்லைனில் செலவழிக்கும் ரிவார்டு புள்ளிகளை 5X ரிவார்டு புள்ளிகளாகக் குறைத்துள்ளது.
அதுபோல, கிளியர்ட்ரிப் வவுச்சர்களை ஒரே பரிவர்த்தனையில் பயன்படுத்திக் கொள்ளப்படும் (ரிடீம்) என்றும், வேறு எந்த சலுகை (ஆஃபர்) அல்லது வவுச்சருடன் இணைக்க முடியாது என்றும் அது அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஜனவரி 6, 2023 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
மேலம், எஸ்பிஐ கார்டு இணையதளத்தின் கூற்றுப்படி, “2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் சிம்ப்ளிகிளிக் அல்லது சிம்ப்ளிகிளிக் அட்வாண்டேஜ் எஸ்பிஐ கார்டு மூலம் அமேசான்.இன்-இல் ஆன்லைன் மூலம் செலவழிக்கும் 10X ரிவார்டு புள்ளிகள் இனி 5X ரிவார்டு புள்ளிகளாக மாற்றப்படும்.
அதேவேளையில், அப்போலோ 24X7, புக்மைஷோ, கிளியர்டிரிப், ஈஸிடைனர், லென்ஸ்கார்ட் மற்றும் நெட்மெட்ஸ் ஆகியவற்றில் ஆன்லைனில் செலவழிக்கும் போது உங்கள் கார்டு தொடர்ந்து 10X ரிவார்டு புள்ளிகளைப் பெறும். இதில் மாற்றமில்லை. இதற்கு விதிகள் நிபந்தனைகள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கிரெடிட் கார்டு மூலம் பொருள்களை வாங்கிவிட்டு, அந்தத் தொகையை இஎம்ஐ-ஆக மாற்றும் போது அதற்கான சேவைக் கட்டணம் 99 ரூபாயிலிருந்து கடந்த நவம்பர் 15ஆம் தேதி ரூ.199 ஆக உயர்த்தப்பட்டது எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனாளர்களால் நிச்சயம் மறக்க முடியாத தகவலாக இருக்கும் நிலையில், தற்போது புதிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...