''மோடியை கொல்லத் தயாராக இருங்கள்..'' காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடி மதத்தின் அடிப்படையிலும், ஜாதியின் அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும் பிளவுபடுத்தி வருகிறார்: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்.
தொண்டர்கள் மத்தியில் பேசும் ராஜா படேரியா
தொண்டர்கள் மத்தியில் பேசும் ராஜா படேரியா


பிரதமர் நரேந்திர மோடியை கொல்லத் தயாராக இருங்கள் என மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா, தொண்டர்கள் மத்தியில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

படேரியாவின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்களைத் தூண்டும் விதமாக பேசியதாக படேரியா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் அமைச்சரான ராஜா படேரியா தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், தொண்டர்கள் மத்தியில் அவர் பேசிய விடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், பிரதமர் மோடி மதத்தின் அடிப்படையிலும், ஜாதியின் அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும் பிளவுபடுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மையினரின் நிலை அபாயகர நிலையில் உள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தால், பிரதமர் மோடியை கொல்லத் தயாராக இருங்கள் எனப் பேசியுள்ளார். 

இந்த விடியோ இணையத்தில் வைரலானது. பாஜகவைச் சேர்ந்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து படேரியா, தனது பேச்சு குறித்து விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், மோடியை தோற்கடிப்பதைத்தான் கொலை செய்யத் தயாராக இருங்கள் எனக் குறிப்பிட்டேன். நாங்கள் வன்முறைக்கு எதிரான மகாத்மா காந்தியின் கொள்கையைப் பின்பற்றுகிறோம். தேர்தல் போராட்டத்தில் பிரதமர் மோடியைத் தோற்கடிப்போம் என்பதையே அவ்வாறு குறிப்பிட்டேன் என விளக்கமளித்துள்ளார். 

இது குறித்து பதிலளித்துள்ள மத்தியப் பிரதேச மாநில முதல்வர், சிவராஜ் சிங் செளஹான், பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயத்தில் வாழ்கிறார். நாட்டின் நம்பிக்கையாக பிரதமர் மோடி திகழ்கிறார். தேர்தல் போரில் காங்கிரஸ் கட்சியால் பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால், பிரதமரைக் கொல்ல வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். இது இயலாமையின் உச்சகட்டம். முழுக்க முழுக்க பாஜகவின் மீதுள்ள வெறுப்புணர்வு. காங்கிரஸின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. விரைவில் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு வழக்குப்பதிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com