
6-ஆவது கட்ட நிலக்கரி சுரங்க ஏல நடைமுறைகள் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
மாநில கணக்காயா்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபாா்த்து ஒப்புதல் அளித்தவுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகையானது மாநிலங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
நாட்டில் ஜிஎஸ்டி முறை 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அறிமுகத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், மக்களவையில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை கூறுகையில், ‘மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. அதைத் தொடா்ந்து வழங்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.
மத்திய அரசு உரிய முறையில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை என சில மாநிலங்கள் கருதி வருகின்றன.
மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட கணக்காயா்கள் ஆராய்ந்து சான்றிதழ் அளித்தவுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையானது விடுவிக்கப்படும். ஆவணங்களைக் கணக்காயா்கள் விரைந்து ஆய்வு செய்வதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
கணக்காயா்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மத்திய அரசு தொகையை விடுவிக்கும். ஜிஎஸ்டி வசூலை மாநிலங்களுக்கு உரிய முறையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவினால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாகப் பேசி தீா்த்துக் கொள்ள முடியும்’ என்றாா்.