நாளை 100-வது நாள்: காஷ்மீர் நோக்கி ராகுல் காந்தியின் நடைப்பயணம்!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் நடைப்பயணமானது வெள்ளிக்கிழமை 100-வது நாளை எட்டவுள்ளது.
நாளை 100-வது நாள்: காஷ்மீர் நோக்கி ராகுல் காந்தியின் நடைப்பயணம்!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் நடைப்பயணமானது வெள்ளிக்கிழமை 100-வது நாளை எட்டவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் பிரமாண்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.

கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து 99-வது நாளாக ராஜஸ்தானில் நடைப்பயணம் நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில் நடைபெற்ற ஹிமாசல் பிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தில்கூட பெரிதும் பங்கு பெறாமல், தொடர்ந்து நடைப்பயணத்திலேயே முழுக் கவனத்தையும் ராகுல் காந்தி செலுத்தி வருகிறார்.

இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், மாநில தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள என பல்வேறு தரப்பினர் பங்கேற்று ஆதரவளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நடைப்பயணத்தில் பங்கேற்க நடிகர் - நடிகைகளுக்கு காங்கிரஸ் தரப்பில் பணம் அளிக்கப்படுவதாக விமர்சனமும் எழுந்தது.

இருப்பினும், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் போன்ற செயல்பாட்டாளர்களும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்று ஆதரவளித்து வருகின்றனர்.

முக்கியமாக இந்த நடைப்பயணத்தில், ஓய்விற்கான நாள்களை தவிர, பிற நாள்களில் இரவில் நடைப்பயணம் எங்கு நிறுத்தப்படுகிறதோ, அதே இடத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட நடைப்பயணக் குழுவினர் தங்கி வருகின்றனர்.

ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கான பலன் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்றே காங்கிரஸ் கட்சியினரின் கருத்தாக உள்ளது.

இந்த நடைப்பயணமானது மொத்தம் 3,570 கிலோ மீட்டர் கடந்து 150-வது நாளில் காஷ்மீரை அடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com