
சுதா மூர்த்தி / நாராயண மூர்த்தி (கோப்புப் படம்)
இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக நாராயண மூர்த்திக்கு ரூ.10,000 கடன் கொடுத்ததாக, அவரின் மனைவி பகிர்ந்த தகவல் பலரிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத அங்கமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தற்போது மாறியுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர் என்.ஆர். நாராயண மூர்த்தி. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டுகிறது. இதில் 3.35 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
படிக்க | தவறான அமைச்சரிடம் கேட்கிறீர்கள்: சுருக்கென்று பதிலளித்த எஸ். ஜெய்சங்கர்
இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம் சமீபத்தில் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட சுவாரசியத்தை நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டதாவது,
1981ஆம் ஆண்டு 7 பொறியாளர்களுடன் மும்பையிலுள்ள ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. தோற்றாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு எனது கணவருக்கு ரூ.10,000 கடனாக வழங்கினேன். குடும்பத்தின் அவசர செலவுக்காக நான் தனிப்பட்ட முறையில் சேமித்து வைத்திருந்த பணம் அது. அந்த பணத்தில் தொடங்கப்பட்டதுதான் இன்ஃபோசிஸ். தற்போது இதன் மதிப்பு 800 கோடி டாலர்களாக உள்ளது என்று நெகிழ்ச்சியடைந்தார்.
புதிதாக சொந்த தொழில் தொடங்குவதற்கு தைரியம் வேண்டும் என்பது என் தனிப்பட்ட அனுபவம். தியாகம், மன நிறைவு ஆகியவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது என்றார் இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...