
பிகார் மக்களை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா தலையிட்டபோது, அமைச்சர் பியூஷ் கோயல் குறுக்கிட்டு, 'அவர்கள் வழியில் சென்றால் நாட்டை பிகாராக மாற்றிவிடுவார்கள்' என்று எதிர்மறை கருத்தைத் தெரிவித்தார்.
பியூஷ் கோயலின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு முன்பாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிகார் மக்களை இழிவுபடுத்தியதற்கு அமைச்சர் பியூஷ் கோயல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பியூஷ் கோயல், பிகாரையோ, பிகார் மக்களையோ அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லை என்றும் உணர்வுரீதியாக அவர்களை புண்படுத்தியிருந்தால் தான் பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்: அமைச்சர் விளக்கம்