2022 அரசியலில் ஜொலித்த பிரபலங்கள்!

2022 அரசியலில் ஜொலித்த பிரபலங்கள்!

2022 ஆம் ஆண்டின் அரசியல் நிகழ்வுகளில் முக்கியமானவர்களாக மாறியவர்கள் குறித்து ஒரு பார்வை.... 

2022 அரசியல் நிகழ்வுகளில் முக்கியமான நபர்களாக மாறியவர்கள் குறித்து சிறு பார்வை... 


நரேந்திர மோடி 

குஜராத் தேர்தலுக்காக பிரசாரத்திற்கு வந்தபோது, நரேந்திர மோடிக்காக 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் குவிந்தனர். மோடிக்கு மக்களிடமிருந்த வரவேற்பு குஜராத் தேர்தலிலும் எதிரொலித்தது. குஜராத் பேரவையியிலுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களை தேர்தலில் கைப்பற்றியது. ஹிமாசல், தில்லி மாநகராட்சி தேர்தலில் சறுக்கியிருந்தாலும் குஜராத்தில் அவரின் வலிமையை நிரூபித்தார். 

ராகுல் காந்தி

'பேன் இந்தியா வால்கர்' என்று சொல்லுமளவுக்கு நடைப்பயணத்தை தீவிரமாக்கிக்கொண்டார் ராகுல் காந்தி. இவரின் ஒற்றுமைப் பயணம் எதைக் கொடுத்ததோ இல்லையோ, பல தலைவர்களை தன் பயணம் குறித்து பேசவைத்தார். கடும் குளிரிலும் ஒற்றை டி-ஷர்ட் மட்டுமே அணிந்து நடைப்பயணம் மேற்கொள்வது, பலரிடையே சந்தேகங்களையும் சர்ச்சையையும் எழுப்பியது. ஆனால், தாயாரின் ஷூவை குனிந்து சரி செய்தது, குழந்தைகளை நடைப்பயணத்தின்போது கட்டியணைப்பது போன்றவற்றின் மூலம் மக்கள் மனங்களை வென்றார். அது 2024-ன் வெற்றியாக மாறுமா?

குலாம் நபி ஆசாத்

காங்கிரஸில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர், யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸிலிருந்து விலகி, ஜனநாயக ஆசாத் கட்சி என்ற புதுக் கட்சியை தொடங்கினார். ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவர் என வெளிப்படையாக அறிவித்த இவர், தனது விலகல் கடிதத்தை சோனியாவிடம் கொடுத்து புதுக்கட்சிக்கான பணிகளைத் தொடர்ந்தார்.

சச்சின் பைலட்

ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது துணை முதல்வராக பொறுப்பேற்றார். ராஜஸ்தான் அரசியலில், ஆட்சி பொறுப்பில் ஏற்பட்ட புயலைக் கட்டுக்குள் கொண்டுவந்து ராஜஸ்தான் காங்கிரஸின் முக்கிய அங்கமாக மாறினார். ராஜஸ்தான் காங்கிரஸில் அமைதியை நிலைநாட்டி முக்கிய நபராக உருவெடுத்தார்.  

உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் களத்தில் பல்வேறு புதிர்களுக்கு பதிலளித்து, வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் நடிப்புத் துறையிலிருந்து மாறி முழு நேர அரசியல் நட்சத்திரமாக மாறினார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். முதல்வரின் மகன் என்பதால், இப்பதவியெல்லாம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது என்ற விமர்சனம் இருந்தாலும் கூட, செயல்கள் மூலம் பதிலளிப்பேன் என்றார். 

யோகி ஆதித்யநாத்

காவி நிற உடையணிந்த முதல்வர். நம்பும்படியாக இல்லையென்றாலும், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் காட்டிய தீவிரத்தால், உத்தரப் பிரதேச மக்கள் வாக்களித்து இம்முறையும் வெற்றி பெறச் செய்தனர். முஸ்லீம் மக்களின் குடியிருப்புகளில் 'புல்டோசர்' விட்டு இடித்தவர் என்ற பெரும் விமர்சனம் இருந்தாலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேச தேர்தல் அவருக்கு சாதகமாகவே அமைந்தது.

சுக்விந்தர் சிங் சுக்

இந்த ஆண்டு நடைபெற்ற ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியாக மாறினார். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மக்களிடம் வாக்குகளாக மாற்றி, 68 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றினார். 

அரவிந்த் கேஜரிவால்

சிங்கத்தின் குகைக்குள் இறங்கி மோதும் அளவுக்கு தன்னை பலம் மிக்கவராக கருதும் அரவிந்த் கேஜரிவால், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் கோட்டையாக விளங்கிய குஜராத்தில், 5 தொகுதிகளில் வென்றார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவுக்கு எதிரான போட்டியாக மாறினார். அவர் மட்டுமே அதற்கு காரணமல்ல என்றாலும், ஆம் ஆத்மியின் முதுகெலும்பாக மாறினார். 

அமிதாப் பச்சன்

கோபமான இளைஞராக இருந்த அமிதாப் பச்சன், 'உங்களில் யார் கோடீஸ்வரர்' நிகழ்ச்சி மூலம், உற்சாகமான முதிர்ந்தவராக அறியப்பட்டார். சமூக பிரச்னைகளுக்கு மெளனம் காத்திருந்ததால், பலரின் சமூக வலைதள கேலிக்கு உண்டான அமிதாப் பச்சான், கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட தணிக்கை முறை, கருத்து சுதந்திரம் உள்ளிட்டவை குறித்து பேசியதால், பலரின் பாராட்டுகளைப் பெற்றார். தற்போதுவரை திரைப்பட தணிக்கை சர்ச்சைக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜெய்சங்கர்

பேச்சுக்களின்போது, அமைதியான குணத்தை வெளிப்படுத்தி நாடுகளுக்கிடையே சமரசத்தையே முதன்மையாக வைப்பவர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். ஆனால், எதிர்க்கட்சிகள் தற்போது இவர் மீதான பார்வையை மாற்றியுள்ளது. 

உலகின் 30 சதவிகித உற்பத்தியை கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்டு இயங்குவது இனி உதவாது என அதிரடியாகத் தெரிவித்தார். இந்தியர்களுக்கான விசா விவகாரத்தில், அமெரிக்காவிடம் வெளிப்படையாக பேசியது, ரஷிய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நட்பை இழக்க நேரிடும் என்ற தயக்கத்தைக் கடந்து வெளிப்படையாக பேசியது என இவர் சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியமான முடிவுகளை எடுத்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com