ஏர் இந்தியாவுக்கு அடுத்து விற்பனைக்கு வருவது இதுதானா?

தில்லியில் இருக்கும் மிகவும் புகழ்பெற்ற நட்சத்திர விடுதியான தி அஷோக் ஓட்டலை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியாவுக்கு அடுத்து விற்பனைக்கு வருவது இதுதானா?
ஏர் இந்தியாவுக்கு அடுத்து விற்பனைக்கு வருவது இதுதானா?

புது தில்லி: தில்லியில் இருக்கும் மிகவும் புகழ்பெற்ற நட்சத்திர விடுதியான தி அஷோக் ஓட்டலை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தில்லியின் இதயத் துடிப்பாக விளங்கும் லுட்யென்ஸ் பகுதியில், அதுவும் குறிப்பாக பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில்தான் இந்த தி அஷோக் ஓட்டல் அமைந்துள்ளது.

மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையினர், 25 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த மிகப்பெரிய சொத்தை, சுமார் 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மத்திய அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சியை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குத்தகைக்கு வரவிருப்பதாகக் கூறப்படும் இந்த ஒட்டுமொத்த சொத்தில், 300 விடுதி அறைகள், ஊழியர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பு, வணிக வளாகம், தனித்துவம் மிக்க மிகப்பெரிய உணவகம், கேளிக்கை விடுதி மற்றும் சுகாதாரக் கூடம் ஆகியவை அடங்கும்.

தி அஷோக் ஓட்டலை குத்தகை விற்பனை செய்வதன் மூலம், மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அமைச்சகத்தின் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை பெற்று பிறகு பூர்வாங்கப் பணிகள் தொடங்கி, இந்த ஆண்டுக்குள் தி அஷோக் ஓட்டல் குத்தகைக்கு விடப்படும் என்றும்  அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த ஓட்டலை குத்தகைக்கு எடுக்கப்போக்கும் தொழிலதிபர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதுவரை புது தில்லியில் முகேஷ் அம்பானிக்கு என்று சொந்தமாக எந்த நட்சத்திர ஓட்டலும் இல்லை. ஏற்கனவே, கிளாரிட்ஜ் ஓட்டலிலிருந்து நந்தாஸ் மட்டும் பிரித்து வாங்கிக் கொள்ள முகேஷ் அம்பானி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அதன்பிறகு, மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட, கிழக்கு இந்திய ஓட்டல்ஸ் லிமிடட் நிறுவனம் நடத்தி வந்த  ஓட்டல் ஓபராயில் முகேஷ் அம்பானி முதலீடு செய்தார். தற்போது, அவரது மனைவி நீதா, அதன் இயக்குநராக உள்ளார். ஆனால், அந்த ஓட்டலின் ஒட்டுமொத்த நிர்வாகமும் பிரித்விராஜ் சிங் பிகி ஓபெராய் வசமே உள்ளது. எனவே, ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பும் தங்களிடமே இருக்கும் வகையில் ஒரு நட்சத்திர ஓட்டலை வாங்க முகேஷ் அம்பானி திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு தி அஷோக் நல்வாய்ப்பாக உள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஏற்கனவே, வாஜ்பாயி தலைமையில் மத்திய அரசு இருந்த போதே, அவரது மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா இந்த ஓட்டலைக் கைப்பற்ற திட்டமிட்டதாகவும், ஆனால், அப்போது மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த ஜக்மோகன், அதற்கு முட்டுக்கட்டை போட்டு, ஓட்டலை விற்பனை செய்ய மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் உள்ளன.

மத்திய அரசுக்கு லாபமீட்டித் தரும் எந்த நிறுவனத்தையும் விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசுக்கு ஜக்மோகன் கூறிவிட்டார். அதேவேளையில், தி அஷோக் ஓட்டல் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கவும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தி அஷோக் ஓட்டல் சில கோடிகள் வருவாயை அதிகரித்துக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com