கரோனா பலி: 5 லட்சம் இறப்புகளுடன் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா

உலகம் முழுவதும் 221 நாடுகளுக்கு கரோனா தொற்று பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதுவரை தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கையில் இந்தியா 5 லட்சம் இறப்புகளைக் கடந்தது,
கரோனா பலி: 5 லட்சம் இறப்புகளுடன் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா

புது தில்லி: உலகம் முழுவதும் 221 நாடுகளுக்கு கரோனா தொற்று பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதுவரை தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கையில் இந்தியா 5 லட்சம் இறப்புகளைக் கடந்து, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது நாடாக உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்தாலும் உருமாற்றம் அடைந்து தொற்று பரவலால் பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இந்தியாவில் 2021 ஜூலை 1 ஆம் தேதி 4 லட்சத்தில் இருந்த இறப்பு எண்ணிக்கை 217 நாள்களுக்கு பிறகு 5 லட்சத்தை எட்டியது. சுமார் 8 மாதங்களை கடந்து ஒரு லட்சம் இறப்புகளை பதிவு செய்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பேரழிவு தரும் இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டது.

மே 23 ஆம் தேதி இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தையும், ஏப்ரல் 27 ஆம் தேதி இரண்டு லட்சத்தையும் தாண்டியது.

2020 அக்டோபர் 2 ஆம் தேதி இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.

தற்போது தினசரி 1,072 இறப்புகளுடன் மொத்த இறப்புகள் 5,00,055 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்பு மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 7,71,50,412 ஆகவும், பலி எண்ணிக்கை 9,20,829 ஆகவும் உயர்ந்துள்ளது. 

அதைத் தொடர்ந்து தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,60,99,735 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 6,30,001 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தொடர்ந்து தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்து வரும் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 41,952,712    -ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 5,00,087 பேருடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பு, பலி தரவுகளை தொகுத்து வரும் வேர்ல்டோமீட்டர்களின் தரவுகளின் படி, இந்தியா தற்போது அதிக அளவில் பரவக்கூடிய உருமாற்றம் அடைந்து வரும் ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பால் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளது. 

இருப்பினும், நிபுணர்களின் கூற்றுப்படி, இரண்டாவது அலையுடன் ஒப்பிடுகையில் இது பெரும்பாலும் குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. 

தொற்றுநோய் நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கவலைக்குரிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இருந்து வந்தாலும், ஒட்டுமொத்தமாக கரோனா நோய்த்தொற்றின் பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

செய்தியாளர் கூட்டம் ஒன்றில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாரந்தோறும் தொற்று பாதிப்பு மற்றும் பாதிப்பு விகிதம் குறைந்து வருவதாகவும், கேரளம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாரந்திர தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகக் கூறினார். 

மேலும் தினசரி கரோனா பாதிப்பி, தினசரி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மற்றும் தினசரி நேர்மறை விகிதம் ஆகியவற்றில் நிலையான சரிவைக் கண்டுள்ளது, இது நோய்த்தொற்றின் பரவல் குறைந்து வருவதையே குறிக்கிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து தொற்று இறப்பு விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அகர்வால் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com